நெல் ஜெயராமன் மறைவு: ஸ்டாலின், வைகோ, கமல் உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல்

சென்னை:

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இயற்கை ஆர்வலர் நெல் ஜெயராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் அடக்கம் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளது.

ஸ்டாலின் இரங்கல்:

இந்த நிலையில் மறைந்த நெல் ஜெயராமன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது மனைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

விவசாய நலனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் நெல் ஜெயராமன். அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய இழப்பு என்பது, அவரின் குடும்பத்தாருக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த விவசாயிகளுக்கே பேரிழப்பு.  நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு நடத்தியவர் நெல் ஜெயராமன்.

வைகோ இரங்கல்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, நான் அவருடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய போராடிள அவர். அதனால்தான் நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவருக்கு  நெல் ஜெயராமன் என பெயரிட்டார். இவ்வளவு புற்றுநோயில் பாதிக்கப்பட்ட நிலையிலும்கூட அவர் போராட்டம் நடத்தினார். மாபெரும் தியாகி. விவசாயிகள் தங்கள் உயிர்ப் பாதுகாவலனை இழந்துவிட்டனர்.

கமல் இரங்கல்:

தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக் கிடந்ததை உணர்ந்து அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு.நெல் ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.

தமிழிசை இரங்கல்:

நெல் பற்றிய விழிப்புணர்வை விதைத்திருக்கிறார் நெல்ஜெயராமன் என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

முத்தரசன் இரங்கல்:

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு நெல் விழா நடத்தியவர் நெல் ஜெயராமன் என்று கம்யூனிஸ்டு கட்சி தலைவர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.