3வயது மகளை அங்கன்வாடியில் சேர்த்த நெல்லை கலெக்டர்! சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு மழை

நெல்லை:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் ஷில்பா, தனது 3வயது மகளை அரசின் அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் ஆட்சியரின் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாராட்டு மழை பொழிந்து வருகிறது….

நெல்லை மாவட்ட கலெக்டராக  ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ், கடந்த 25-05-2018 அன்று பொறுப்பேற்றார். நெல்லை மாவட்டத்தில் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவராவார். ஐஏஎஸ் படிப்புடன் எல்எல்பி சட்டப்படிப்பும் படித்துள்ள ஷில்பா,  2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் இந்திய அளவில் 46வது இடத்தை பெற்றவராவார். 2010 ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) ஆகவும்,  அதனைத் தொடர்ந்து சார்-ஆட்சியராக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார்.

மகள் கீதாஞ்சலியுடன் ஆட்சியர் ஷில்பா

பின்பு ஓராண்டு காலம் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையாளராக (கல்வி) பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவராக 2017-ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டார்.. அப்போது, தமிழ் நாட்டில் தொழில் முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் இவர் உருவாக்கிய ஒற்றைச் சாளர முறையிலான (Single Window system) தொழில் வங்குவதற்கான நடை முறைகள் தொழிற்சாலைகள் உருவாவதை எளிமை யாக்கியது.

இதனால் ஷில்பாவின் பெயர் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பிரபலமானது. இதையடுத்தே கடந்த 2018ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்.

நேர்மையாகவும், அதிரடியாகவும் நடவடிக்கை எடுத்து, மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ள ஷில்பா, தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கை மக்களிடையே மேலும் அவரது புகழை உயர்த்தி உள்ளது.

தனது 3வயது மகள் கீதாஞ்சலியை,பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள் ளார். தற்போது கீதாஞ்சலி  மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கற்றும், விளையாடியும் பகல் பொழுதை கழித்து வருகிறார்….

மற்ற அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க ஆரம்பித்துள்ளார்.   மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாவட்ட ஆட்சியரே தனது மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனால் ஆட்சியர் மக்கள் பணியில் தனது கவனத்தை முழுமையாக செலுத்த முடிவதாக கூறி உள்ளார்.