கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு விருது! விமானம் மூலம் சென்னைக்கு வரவழைப்பு

சென்னை:

ரிவாளுடன் மிரட்டி கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை கடையத்தை சேர்ந்த  வயதான விவசாய  தம்பதிக்கு தமிழக அரசு வீரதீரச் செயலுக்கான விருது வழங்கும் என தெரிகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் சண்முகவேல், செந்தாமரை தம்பதியினர்

தம்பதியினர் இருவரும் இன்று தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் அரசு அதிகாரிகளால் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர்.  நாளை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் விழாவில், அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த வயதான விவசாய தம்பதிகளான சண்முகவேல், செந்தாமரை இரவு தனது வீட்டின் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கொள்ளையர்கள் அவர்களை அரிவாளைக் கொண்டு மிரட்டிய நிலையில், தம்பதிகள் இருவரும் சேர்ந்து அந்த கொள்ளையர்களை அருகில் இருந்து நாற்காலி, பக்கெட் போன்ற பொருட்களைக் கொண்டு அடித்து விரட்டினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வயதான நிலையிலும் கொள்ளையர்களை விரட்டியடித்த அவர்களின் செயலை ஏராளமானோர் பாராட்டிய நிலையிலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தம்பதிகள் இருவரையும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி தாசில்தார் வெங்கடேஷ், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்துள்ளார். இன்று மாலை அவர்கள்  தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

அதைத்தொடர்ந்து நாளை நடைபெற உள்ள சுதந்திரதின விழாவின்போது அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வீரதீரச் செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chasing away robbers, Nellai couple, tn govt award
-=-