நெல்லை: பள்ளி மாணவர்கள் செய்த ஆணவக்கொலை

ள்ளி மாணவர்கள் சேர்ந்து ஒரு இளைஞரை ஆணவக்கொலை செய்த தகவல் வெளியாகி நெல்லை மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெல்லாங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிசங்கர். மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பணியாற்றி வந்தார்.   இவர் கடந்த 20ம் தேதி அன்று காலை  ஆற்றுக்கு குளிக்கச்சென்றபோது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிக் கொன்றது. இசக்கிசங்கர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இசக்கிசங்கர்

இசக்கி சங்கரும் அவர் வீட்டு அருகே வசிக்கும் கல்லூரி மாணவி சத்தியபாமாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு சத்திபாமாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் இருவரின் காதலும் தொடர்ந்தது.

இந்த நிலையில்தான் இசக்கி சங்கர்கொல்லப்பட்டார். அவர் இறந்த தகவல் தெரிந்ததும்  சத்தியபாமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த செய்தியை patrikai.com  இதழில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இசக்கிசங்கர் கொலை தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் வீரவநல்லூர் காவல்நிலையத்தினர், கல்லூரி மாணவியான சத்தியபாமாவின் தம்பி ஐயப்பன் என்பவரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.   விசாரணையில்,  ஐயப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இசக்கி சங்கரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பிணமாக…

ஐயப்பன் உள்ளூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். அவருடன் சேர்ந்து கொலை செய்த ஐவரும் அவரது சக மாணவர்கள்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார்,  ’’சிறுவன் ஐயப்பனை விசாரித்தபோது, சம்பவத்தன்று காலையில் இரண்டு பைக்குகளில் தானும் தனது வகுப்பு நண்பர்கள் ஐந்து பேரும் அரிவாளோடு சென்று கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.  தனது சகோதரி மாற்று  சமுதாயத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை என்றார். கொலையில் ஈடுபட்ட  ஐந்து பேருமே குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.   அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பியிருக்கிறோம். ஆனாலும் விசாரணை தொடர்கிறது’’ என்று கூறினார்.

#nellai #honourkilling #School #students #murdered #youth