நெல்லை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  ஆட்சியர் ஷில்பார் பிரபாகர் சதீஷ் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் மேலப்பாளையம் நகராட்சிப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்துதல் தீவிரப்படுத்தப்படுகிறது.

மேலப்பாளையம் நகரப்பகுதியில் வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகளவில் திரும்பி வந்துள்ளதால் அப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிற பகுதிகளிலிருந்து மேலப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாத வண்ணம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது.

மேலப்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அவர்தம் வீடுகளுக்குள்ளாகவே தங்கியிருக்கும் வண்ணம் கண்காணித்திட வேண்டும். அப்பகுதி பொதுமக்கள் குடியிருக்கும் தெருக்களின் முனைகளிலேயே மாநகராட்சி மூலமாகவும், வியாபாரிகள் மூலமாகவும் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் அநாவசியமாக வெளியே நடமாடாமல் இருப்பதை கண்காணித்திட வேண்டும்.

மேலும் அவ்வாறு விற்பனை செய்யப்படும் இடத்தில் போதுமான சுமூக இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலப்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் உள் தெருக்களில் இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதித்து கண்காணித்திட வேண்டும்.

பொருட்கள் வாங்க வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே நடந்து சென்றுவர அனுமதித்திட வேண்டும். உடல்நலக்குறைவு போன்ற, அத்தியாவசிய தேவைக்காக மருத்துவ ஆவணங்களுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்கள் குறித்த விபரங்களையும், அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பும் விவரங்களையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் தனிப்பதிவேட்டில் பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்.

மேற்படி கட்டுப்பாடுகளைத் தீவிரமாக செயல்படுத்திட தகுந்த காவல் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144-ன்படியும் தொற்று நோய்கள் சட்டம் 1897 சரத்து 2-ன் படியும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.