சென்னை:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த ஆலை செயல்பாட்டுக்கும் வரும் பட்சத்தில் நாள் ஒன்று 150 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக மாற்றப்படும் என்றும், ஆலை பணிகள் 2021ம் ஆண்டு  முடிக்கப்பட்டு நீர் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை குடிநீருக்காக மக்கள் அல்லாடி வரும் நிலையில், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நெம்மேலியில் மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னை மக்களுக்கு  830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப் பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லாத நிலையில், குடிநீர்  பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மூலம் குடிதண்ணீர் வழங்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 10 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் திட்டம், கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது

அதுபோல காஞ்சிபுரம் நெம்மேலியில் தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டில் தொடங் கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் (15 கோடி லிட்டர்) திறன் கொண்ட மேலும் ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அனுமதி கடந்த ஆண்டு பெறப்பட்ட நிலையில், அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில்,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் உதயகுமார், பெஞ்சமின் உள்பட பலர் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் குடிநீர் மூலம் தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையர் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்க நல்லூர், உள்ளகரம்- புழுதிவாக்கம், மடிப்பாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பகுதியில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.