காத்மாண்டு: கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை நேபாளம் தடுப்பது, பீகாரில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அம்மாநில அமைச்சர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.

இந்திய பகுதிகளை தமது வரைபடத்துடன் சேர்த்து இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் தொல்லை தந்து வருகிறது நேபாளம். இத்தகைய தருணத்தில் வேறு ஒரு முக்கிய பிரச்னையை எழுப்பி இருக்கிறது.

அதாவது, இந்தியா-பீகார் எல்லையில் நதிக்கரையோரங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு இடையூறு செய்யும் வகையில்  தடுப்புகளை நேபாளம் அமைத்திருப்பதாக பீகார் குற்றச்சாட்டை  எழுப்பியுள்ளது.

இது குறித்து அம்மாநில நீராதாரத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா கூறி இருப்பதாவது: லால் பாக்கியா ஆற்றில் நடக்கும் கந்தக் அணை பழுதுபார்க்கும் பணியை நேபாளம் அனுமதிக்கவில்லை. மேலும், அவர்கள் பல இடங்களில் பழுதுபார்க்கும் பணிகளை நிறுத்திவிட்டார்கள்.

முதன்முறையாக, பழுதுபார்ப்பு பணிகளில் இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்கிறோம். உள்ளூர் பொறியாளர்கள், மாஜிஸ்ட்ரேட் மட்டத்தில் நேபாள அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர். மத்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட கோருகிறோம்.

இந்த விவகாரத்தை உடனடியாகத் தலையிட்டு சரிசெய்யவில்லை எனில் மழைக்காலங்களில் பீகாரின் பெரும்பகுதிகள் வெள்ளக்காடாகி விடும்? என்று அவர் கூறி உள்ளார்.