நேபாளமும் களமிறங்கியது – இந்தியா & சீன எல்லைகள் மூடல்!

காத்மண்டு: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கான தனது எல்லைகளை மூடியுள்ளது நேபாளம்.

நேபாளத்தின் ஒரு அண்டை நாடான சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், நேபாளத்தின் மற்றொரு அண்டை நாடான இந்தியாவில், தற்போது தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தன் பங்கு நடவடிக்கையாக, இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கான எல்லைகளை தற்காலிக நடவடிக்கையாக முடியுள்ளது நேபாள அரசு.

இதுதொடர்பாக, அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கூறுகையில், “ஆசியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நேபாளத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.

மக்களின் எல்லை கடந்த போக்குவரத்தால் நேபாளத்தில் கொரோனா பரவுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்தியா மற்றும் சீனாவுடனான எல்லைகளை நேபாள அரசு தற்காலிகமாக மூடுகிறது. மார்ச் 23 முதல் மார்ச் 29 வரை இந்த தடை நீடிக்கும். எல்லைகள் மூடப்பட்டாலும் சரக்கு போக்குவரத்து தொடரும்” என்றுள்ளார் அவர்.

இந்தியாவும் நேபாளமும் சுமார் 1800 கி.மீ. நீளமுள்ள திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.