அமைதி பேச்சின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள்: இந்தியா, சீனாவுக்கு நேபாளம் அட்வைஸ்

காத்மாண்டு:அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களின் பிரச்னைகளை தீர்த்து கொள்ளும் என்று  நம்புவதாக நேபாளம் கூறி இருக்கிறது.

சில வாரங்களாக இந்தியா, சீனா எல்லை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த 6ம் தேதி இரு நாடுகள் இடையே ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படியாக திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

ஆனால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின் போது, இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ராணுவத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் இந்த விவகாரம் உலக நாடுகளை உற்று பார்க்க வைத்தது.

இந் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களின் பிரச்னைகளை தீர்த்து கொள்ளும் என்று  நம்புவதாக நேபாளம் கூறி இருக்கிறது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:  நாடுகளுக்கு இடையேயான மோதல்களை அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று நேபாளம் கருதுகிறது.

நேபாளம் எப்போதும் பிராந்திய மற்றும் உலக அமைதிக்காக உறுதியாக நிற்கிறது. எங்கள் நட்பு அண்டை நாடான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளின் மனப்பான்மையில் தீர்க்கப்படும் என்று நேபாளம் நம்புகிறது.

இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக அமைதியான வழிமுறைகளின் மூலம் அவர்களின் பரஸ்பர வேறுபாடுகளை தீர்க்கும் என்று நேபாளம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.