புதுடெல்லி: இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் சர்ச்சைக்குரிய வரைபடத்தை ஆதரித்து அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மசோதா, நிரூபிக்கக்கூடிய ஒன்றல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

“இந்த செயற்கையான விஸ்தாரணம் தொடர்பான உரிமைக்கோரல் என்பது வரலாற்று அடிப்படையிலானதோ அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலானதோ அல்ல. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் எல்லைப் பிரச்சினை குறித்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளை சீர்குலைக்கும் ஒரு முயற்சிதான் இது” என்றுள்ளது வெளியுறவு அமைச்சகம்.

இந்த மசோதா கடந்த மே மாதம் 31ம் தேதி அந்நாட்டு சட்ட அமைச்சர் ஷிவமாய தம்பஹாம்பேவால் பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்டது.

நேபாளத்தினுடைய இந்தப் புதிய வரைபடத்தின்படி, இந்திய வரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கலாபனி, லிம்பியாதுரா, லிபுலெக் போன்ற பகுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தேசிய சின்னத்தில் இந்த வரைபடத்தை அப்டேட் செய்யுமாறும் இந்த மசோதா கேட்டுக்கொண்டுள்ளது.

கலாபனி பகுதியானது, உத்ரகாண்ட் மாநிலத்தின் பித்தோரகர் மாவட்டத்தில் அடங்கியது என்று இந்தியாவும், அப்பகுதி தனது தர்ச்சுலா மாவட்டத்தைச் சேர்ந்தது என்று நேபாளமும் உரிமைக் கோரி வருகின்றன.