காத்மாண்டு: இந்தியா, பாக். இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக நேபாளம் கூறி உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்தியா ரத்து செய்தது. அப்போது இருந்தே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் முடிவு பாகிஸ்தானில் இருந்து வலுவான எதிர்வினைகளை ஆற்றி வருகிறது. ராஜதந்திர உறவுகளை குறைத்து, இந்திய தூதரை வெளியேற்றும் அளவுக்கு சென்றது.

இந் நிலையில், இந்தியா, பாக். இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக நேபாளம் முன் வந்துள்ளது. இது குறித்து நேபாளம் கூறி இருப்பதாவது:

எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க உரையாடல் சிறந்த வழியாகும். வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அது உரையாடலின் மூலம் தீர்க்கப்படலாம். தேவைப்பட்டால், நாங்கள் ஒரு மத்தியஸ்தரின் பாத்திரத்தையும் வகிக்க முடியும்.

இரு நாடுகளுக்கிடையில் சிறந்த உரையாடலை உருவாக்குவதே பிரச்சினைகளை தீர்க்க சிறந்த தீர்வு. நாங்கள் கருவியாக இருக்க முடியும், ஆனால் நேரடி தொடர்பை வளர்ப்பது (இரு தரப்பினருக்கும்) சிறப்பாக இருக்கும் என்று நேபாளம் கூறி இருக்கிறது.