இந்தியாவின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நேபாள மக்களும் பாதிப்பு… பழைய 500, 1,000 ரூபாய்களுடன் தவிப்பு

காத்மண்டு:

இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்லாது பக்கத்து நாடான நேபாள மக்களையும் பாதித்துள்ளது. தங்களது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இந்திய மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, இன்று வரை நேபாள மக்களுக்கு கிடைக்கவில்லை. நேபாளத்தில் கணிசமான அளவு 500 மற்றும் 1000 இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர், மக்கள் நேபாளத்துக்கு 25 ஆயிரம் இந்திய ரூபாய் வரை கொண்டு வர முடியும். இது தவிர, நேபாள வர்த்தகத்தின் 70 சதவிகிதம் இந்தியாவிலிருந்து நடக்கிறது. எனவே, பொதுவாகவே நேபாள மக்கள் இந்திய ரூபாய்களை வைத்திருப்பார்கள். நேபாளத்தின் தேசிய வங்கியில் 8 கோடி இந்திய ரூபாய் இருப்பு உள்ளது. நேபாள் மக்களிடம் எவ்வளவு ரூபாய் உள்ளது என்பதில் இன்னும் தெளிவான தகவல் இல்லை.

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் பேசவுள்ளதாக கூறியிருந்தார். ஆனால் இது தொடர்பாக யாரும் கலந்துரையாடவில்லை என்று இந்திய வெளியுறவு துறை அறிவித்தது. நேபாளத்துக்கான இந்திய தூதரான மஞ்ஜீவ் சிங், இந்த விவகாரம் தொடர்பான முறையான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

நேபாளத்தில் வாழும் பலர் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.