காத்மண்டு: நேபாள நாடாளுமமன்றத்தை கலைக்குமாறு, அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலி, ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசந்தாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் மீதும் மறைமுகமாக குற்றம்சாட்டிய பிரதமர் ஒலியின் நடவடிக்கைகளினால் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது.

அதன் காரணமாக கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டில் கோரிக்கைகள் வலுக்க தொடங்கியது. கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்துகொண்டே வர, நாடாளுமன்றத்திலும் மெஜாரிட்டியை இழந்தார்.

இந் நிலையில் இன்று பிரதமர் சர்மா ஒலி அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்வதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பரிந்துரை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.