காத்மண்டு: நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் கேபி ஷர்மா ஓலியை, கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது கட்சியின் இன்னொரு பிரிவு.

நேபாளத்தில், தற்போது அரசியல் நெருக்கடி முற்றி வருகிறது. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையை கலைப்பதற்கு முடிவுசெய்துள்ளார் பிரதமர் ஓலி. இந்த முடிவை எதிர்த்துதான் கட்சியின் எதிர்க்குழு, அவரை நீக்குவதாக அறிவித்துள்ளது.

பாரிஸ் டன்டாவில் நடைபெற்ற கட்சியின் மற்றொரு எதிர்ப்புக்குழு கூட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஓலி நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார், எதிர்ப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் நாராயண்கஜி ஷ்ரேதா.

பிரதமர் ஷர்மா ஓலி, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று காரணம் கூறப்பட்டுள்ளது. இந்த நீக்குதல் தொடர்பான எழுத்துப்பூர்வ கடிதம், பிரதமரின் இல்லத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், அக்கடிதத்திற்கு பிரதமரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

‍அதேசமயம், கட்சியிலிருந்து ஓலி நீக்கப்படுவார் என்பது தொடர்பான எச்சரிக்கை, எதிர்ப்பு பிரிவால் கடந்த வாரமே விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.