Random image

இந்தியாவில் நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியை நேபாளம் புறக்கணிப்பு

காத்மண்டு:

இந்தியாவில் நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்கபோவதில்லை என்று நேபாளர் அறிவித்துள்ளது.

நேபாளம் & இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேபாள நாட்டின் வர்த்தக தொடர்பு முழுவதும் இந்தியாவை நம்பியே இருந்தது. இந்நிலையில் சீனாவுடன் புதிய வர்த்தக உறவுகளை நேபாளம் ஏற்படுத்திக் கொண்டது. இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது இந்தியா& நேபாளம் இடையிலான உறவில் மேலும் ஒரு விரிசல் ஏற்பட்டது.

பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளின் அமைப்பு (பிம்ஸ்டெக்) சார்பில் அடுத்த வாரம் இந்தியாவில் ராணுவ கூட்டு பயிற்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள நேபாளம் மறுத்துள்ளது.

இதை அந்நாட்டு பிரதமர் கே.பி. ஒலியின் ஆலோசகர் குந்தன் ஆர்யால் உறுதிப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை புனேயில் நடக்கும் கூட்டு ராணுவ பயிற்சியை நேபாளம் கலந்துகொள்ளாது. இது நேபாள அரசின் அதிகாரப்பூர்வ முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டு பயிற்சி திட்டத்ததை இந்தியா தான் முதலில் கடந்த ஜூன் மாதம் முன்னெடுத்தது. இதைதொடர்ந்து டில்லியில் பிம்ஸ்டெக் நாடுகளின் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

நேபாள ராணுவ கலந்துகொள்ளவில்லை என்றால் அந்நாட்டின் சார்பில் 3 பேர் கொண்ட கண்காணிப்பாளர் குழு கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ கூட்டு பயிற்சி மட்டுமின்றி பிம்ஸ்டெக் நாடுகளின் ராணுவ தளபதிகளுடன் இணைந்து மாநாடு நடத்தும் திட்டமும் உள்ளது.

நேபாள ராணுவத்துக்கு புதிய தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் திங்கட்கிழமை பதவி ஏற்கிறார். உடனடியாக அவரால் இந்திய பயணத்தை மேற்கொள்ள இயலாது. எனினும் அடுத்து இந்திய ராணுவம் மற்றும் நேபாள ராணுவத்துக்கு இடையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.