காத்மாண்டு: கும்பமேளாவுக்காக இந்தியா வந்த நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்ப மேளா யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஏராளமானோர் கூட்டம். கூட்டமாக திரண்டதால் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந் நிலையில், கும்பமேளாவுக்காக இந்தியா வந்து சென்ற நேபாள முன்னாள் மன்னருக்கு ஞானேந்திர ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விழாவுக்கு ஞானேந்திர ஷா, மனைவி கோமால் ஷாவுடன் வந்துள்ளார்.

இருவரும் இந்தியா வருவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். ஆனால் அப்போது கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. விழாவை முடித்துக் கொண்டு ஏப்ரல் 18ம் தேதி இருவரும் நாடு திரும்பினர்.

ஆனால் இன்று இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கும்ப மேளாவுக்கு வரும்படி ஞானேந்திர ஷாவுக்கு கும்ப மேளா சிறப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.