பிரீதி ஜிந்தாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்த முன்னாள் ஆண் நண்பர்

மும்பை

பிரீதி ஜிந்தாவின் முன்னாள் நண்பர் நெஸ் வாடியா தனது கோ ஏர் நிறுவன விமானத்தில் பிரீதி பயணம் செய்ய தடை விதித்துள்ளார்.

 

பிரபல பாலிவுட் நடிகையான பிரீதி ஜிந்தா ஐபிஎல் கிரிக்கெட் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ஆவார். இவரும் பிரபல தொழிலதிபரும் கோ ஏர் விமான நிறுவன உரிமையாளருமான நெஸ் வாடியாவும் . கடந்த 2000 ஆம் வருடத்தில் இருந்து மிகவும் நெருக்கமாக இருந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு ஒரு பார்ட்டியில் நெஸ் வாடியா பிரீதி ஜிந்தாவை அறைந்ததால் பிளவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் இணைந்த இவர்கள் இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் தகராறு ஏற்பட்டது. டிக்கட் விநியோகம் குறித்து ஒரு ஊழியருடன் நெஸ் வாடியா கோபம் கொண்டிருந்த போது பிரீதி ஜிந்தா அதில் தலையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் நடந்த சண்டையில் பிரீதி ஜிந்தாவை நெஸ் வாடியா தாக்கியதாகவும் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகவும் பிரீதி காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வாடியா மீது பெண் மீது தவறான எண்ணத்துடன் தாக்குதல் நடத்துதல், வேண்டுமென்றே அவமானப்படுத்துதல், பெண்ணிடம் தவறான வார்த்தைகள் மற்றும் செய்கைகள் நடத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. வாடியா தரப்பில் இது தனிப்பட்ட விரோதம் காரணமாக போடப்பட்ட வழக்கு என வாதாடியதில் இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பிரீதி ஜிந்தா கோ ஏர் விமானம் மூலம் பயணம் செய்ய மும்பை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட போர்டிங் பாஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் கோ ஏர் விமானத்தில் பிரீதி ஜிந்தா பயணம் செய்யக் கூடாது என அந்த நிறுவன உரிமையாளர் நெஸ் வாடியா உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிரீதி ஜிந்தா தரப்பில், “இது சட்ட விரோதமானது. கோ ஏர் நிறுவனத்தின் விமானங்கள் அரசுக்கு சொந்தமானது. நெஸ் வாடியா அந்த நிறுவனத்துக்கு சொந்தக்காரரே தவிர விமானத்துக்கு அல்ல. அவருக்கு அந்த விமானத்தில் யார் பயணம் செய்ய வேண்டும், யார் செய்யக்கூடாது என முடிவு செய்ய எந்த உரிமையும் இல்லை. இது போன்ற ஒரு மோசமான செய்கையை நெஸ் நடத்தி இருக்க வேண்டாம்” என சொல்லப்பட்டுள்ளது.