இந்து மகாசபை பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேச்சு

டார்ஜிலிங்: நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்து மகாசபையின் பிரிவினை வாத அரசியலை எதிர்த்து, மதச்சார்பற்ற, ஒருங்கிணைந்த இந்தியாவுக்காக போராடினார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட அவர் பேசியதாவது:

ஹிந்து மகாசபையின் பிரிவினைவாத அரசியலை நேதாஜி எதிர்த்தார். அவர் மதச்சார்பற்ற இந்தியாவுக்காக போராடினார். தற்போது மதச் சார்பின்மையை பின்பற்றுபவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

அனைத்து நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது தான் சந்திர போஸ் நமக்கு சொன்ன செய்தி. ஒருங்கிணைந்த இந்தியாவுக்காகப் போராடுவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை.

நேதாஜி மறைவு பற்றி மத்திய அரசு ஒரு சில கோப்புகளை மட்டுமே வகைப்படுத்தி உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 70 வருடங்களுக்கும் மேலாகியும் அவருக்கு என்ன ஆனது என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்பது அவமானகரமான விஷயம் என்றார்.