11

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று வைகோ சொன்னாரா, இல்லையா?

துரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில்  நடைபெற்ற நேதாஜி ( Netaji ) பிரகடன பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ ( Vaiko ), “ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு நாளில் ஆயுதபூஜை நடக்கிறது. நேதாஜி உயிருடன் இருப்பதாக கடந்த 1946ம் ஆண்டில் காந்தியடிகள் தெரிவித்தார். நேதாஜி தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு ஏன் மறைக்கிறது?

நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவற்றை விரைவில் வெளியிட்டு அனைவரின் முகத்திரையையும் கிழிப்பேன்” என்று வைகோ பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

நேதாஜி, 1897ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி பிறந்தார்.  1945ம் ஆண்டு  ஆகஸ்ட் 18ம் தேதி (18-07-1945) விமானவிபத்தில் அவர் மரணமடைந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் எந்த விபத்தும் நடக்கவில்லை..  அதன் பிறகும் அவர் உயிரோடு வாழ்ந்தார் என்று பலராலும் சொல்லப்படுகிறது.

1945க்குப் பிறகு அவர், ரஷ்யாவுக்கு  சென்றுவிட்டதாகவும், இந்தியாவிலேயே வாழ்ந்து 1970களில் முதுமை காரணமாக இறந்துவிட்டதாகவும் பலவித யூகச் செய்திகள் அடிபடுகின்றன.

இந்த நிலையில், “நேதாஜி உயிரோடு இருக்கிறார். அதற்கான ஆதாரம் இருக்கிறது” என்று வைகோ பேசியதாக வந்த செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

ஏனென்றால்,  1897ம் ஆண்டு பிறந்த நேதாஜி, தற்போது  118 வயதில் வாழ்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே வைகோ பேசியது குறித்து பலவித விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் எழுப்பப்படுகின்றன.   அவரது ஆதரவாளர்கள் சிலர், “1945ல் விமான விபத்தில் (plane crash) அவர் இறந்ததாக சொல்லபடுவதைத்தான்  வைகோ மறுத்தார். ஆனால் ஊடகங்கள்தான் அவரது பேச்சை  தவறாக எழுதிவிட்டன” என்று சமூகவலைதளங்களில் குமுறுகிறார்கள்.

ஆனால், வைகோவின் மகன் துரை வையாபுரி, சிகரெட் விநியோகஸ்தராக இருப்பது குறித்த சர்ச்சை கிளம்பியபோது, வைகோ, “புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. ஆனா, புகை பிடிச்சவன் பலாத்காரம் செய்றதில்லை.  புகை பிடிச்சதுனால  பெண்கள் கையை பிடித்து இழுக்கிறதில்லை. புகை பிடிச்சதுனால அடுத்தவன் கை, காலை வெட்டுறதில்லை. புகை பிடிச்சதுனால பெத்த தாயை பலாத்காரம் செய்யப்போவதில்லை. புகை பிடிக்கிறதால சமுதாயம் அடியோடு நாசமாக்குறதில்லை” என்று பேசியது அதிச்சி அலையை ஏற்படுத்தியது.

அப்போதும் வைகோ ஆதரவாளர்கள் சிலர், “வைகோ அப்படி  பேசவில்லை” என்று சமூகவலைதளங்களில் எழுதினார்கள். ஆனால் வைகோ அப்படி பேசிய வீடியோக்கள் வெளியானது.

“தமிழக அரசியல் தலைவர்களில், உலக வரலாற்றுத் தகவல்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பவர்களில் ஒருவர்  வைகோ.  அவர் தவறான தகவலைச் சொல்லியிருக்க மாட்டார்.  கடந்த மாதம் கூட,  நேதாஜி சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக பேசினார்.

ஒருவேளை உணர்ச்சிவசப்பட்டு, நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்றும் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வைகோ பேசியிருக்கலாம்.  இது குறித்து அவரோ, கட்சியில் விளக்கம் அளிக்கக்கூடிய நிர்வாகிகளோ விளக்கம் அளித்தால் குழப்பம் தீரும்” என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.