நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விடுதலைக்குப் பின்னர் ஒரு யோகியின் வேடத்தில் இந்தியாவில் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார் என்று உறுதிபடுத்தியுள்ளார் அமெரிக்காவின் கையெழுத்து மற்றும் ஆவண ஆய்வாளரான கார்ல் பேக்கெட்.

கடந்த 1945ம் ஆண்டு தாய்வானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்துவிட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன. ஆனால், அந்த விபத்து ஒரு கற்பனை உருவாக்கம்தான். ஏனெனில், நேதாஜி இறந்ததாக சொல்லப்படும் நாளில், அப்படியான எந்த விமான விபத்தும் நடக்கவிலலை என்றே ஆவணங்களில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படியான பல தகவல்கள் உலாவரும் நிலையில், அமெரிக்க கையெழுத்து ஆய்வாளர் கார்ல் பேக்கெட்டிடம், 2 செட் கடிதங்கள் அளிக்கப்பட்டு, அவைப்பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு (அக்கடிதங்களை எழுதியவர்கள் யார் என்ற எந்த விபரங்களும் அவரிடம் பகிரப்படவில்லை) கேட்கப்பட்டது. அக்கடிதங்களை பல விஞ்ஞான செயல்முறைகளின் அடிப்படையில் ஆராய்ந்த அவர், இறுதியில் தெரிவித்தது என்னவென்றால், “இந்தக் கடிதங்கள் அனைத்தும் ஒரே நபரால் எழுதப்பட்டவை” என்பதுதான்.

அந்தக் கடிதங்கள், சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி, தன் படையின் முக்கிய நபர்களுக்கு எழுதியவை மற்றும் பிற்கால இந்தியாவில், உத்திரப்பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் மாவட்டத்தில் வாழ்ந்த கும்நமி பாபா எனும் பெயரில் வாழ்ந்த ஒரு சந்நியாசி, தனக்கு மிகவும் வேண்டிய பபித்ரா மோகன் ராய் என்பவருக்கு எழுதியவை.

சந்திரசூர் கோஸ் மற்றும் அனுஜ் தார் ஆகியோரால் எழுதப்பட்டுள்ள ‘Conundrum: Subhas Bose’s Life After Death’ என்ற புத்தகத்தில், கும்நமி பாபா என்ற சந்நியாசி, பபித்ரா மோகன் ராய் என்பருக்கு, 1962 முதல் 1985 வரை எழுதிய 130 கடிதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ராய், இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் நேதாஜியின் நம்பிக்கைக்குரியவர்.

இந்தப் புத்தகத்தில், இந்திய தேசிய ராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்களால் எழுதப்பட்ட ஜர்னல்கள் உள்பட 10,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்த முன்னாள் உறுப்பினர்கள், கும்நமி பாபாவை சந்தித்தவர்கள்.

இந்த ஆவணங்கள் எல்லாம், நீதிபதி முகர்ஜி கமிஷனிடமிருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, புத்தக ஆசிரியர்களால் பெறப்பட்டவை.

நேதாஜி எதற்காக பல்லாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் என்ற கேள்விக்கும் விடைகாண இப்புத்தகம் முயற்சித்துள்ளது.‍ கும்நமி பாபா எழுதிய கடிதங்களை ஆய்வுசெய்த உளவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, சோவியத்தின் கைதியாக சைபீரியாவில் இருந்தபோது, அவர் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதனால், அவர் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பபித்ரா மோகன் ராய் குடும்பத்தினரால், இக்கடிதங்கள் முதன்முதலாக வெளியுலகிற்கு விடப்பட்டிருப்பதன் மூலம், நேதாஜியின் மரணம் குறித்து பலகோண விசாரணைகளுக்கு உத்தரவிடும் வகையில் நீதிமன்றத்தை அணுக வழியேற்பட்டுள்ளது மற்றும் அந்த விசாரணைகளின் மூலம் பலவிதமான உண்மைகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ளவை வெறும் 20% ஆவணங்களே என்று தெரிவித்துள்ளனர் புத்தக ஆசிரியர்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து வலைதளங்களிலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உலா வருகின்றன. அந்த சின்ன சின்ன சிதறிய தகவல்களை, இங்கே உங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

* இரண்டாம் உலகப்போர் தொடங்கிய சமயம், பிரிட்டனை எதிர்ப்பதற்காக, ரஷ்ய அதிபர் ஸ்டாலின் உதவியை நாடி, அவரிடம் செல்கிறார் நேதாஜி. ஆனால், அவரை, ஒரு பிரிட்டிஷ் உளவாளி என்று சந்தேகப்படும் ஸ்டாலின், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்.

வேறு வழியின்றி, ஹிட்லரை சந்திக்க, ஜெர்மன் செல்கிறார் நேதாஜி. தனது ரஷ்ய படையெடுப்பு வெற்றிபெற்றதும், இந்தியாவின் மீது தனது கவனத்தை திருப்புவதாக, நேதாஜியிடம் உறுதியளிக்கிறார் ஹிட்லர். ஆனால், மாஸ்கோ மற்றும் ஸ்டாலின்கிராட் யுத்தங்களில், ஜெர்மனியின் பெருந்தோல்விகளையடுத்து, ஹிட்லரின் மீதான தனது நம்பிக்கையை இழக்கிறார் நேதாஜி. (காந்தியடிகள் போன்றவர்கள்கூட, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் வென்றுவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது). அவரின் கவனம் ஜப்பானை நோக்கித் திரும்புகிறது.

* ஜப்பானும் தோல்வியடையவே, தென்கிழக்காசியாவில் மையம் கொண்டிருந்த நேதாஜிக்கு, பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச்செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. ஏனெனில், தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், பிரிட்டன் கூட்டுப் படைகளிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் நேர்ந்து, உடனடியாக தூக்கு மேடைக்குச் செல்ல நேரிடும்.

எனவே, ஒரு விமான விபத்து சம்பவம் கற்பனையாக உருவாக்கப்படுகிறது. அதைவைத்து, அவர் தாய்லாந்திலிருந்து அப்போதைய ஜப்பான் கட்டுப்பாட்டிலிருந்த, இன்றைய சீனாவின் மஞ்சூரியா பகுதிக்குச் சென்று, ரஷ்யாவின் சைபீரியாவுக்குள் நுழைகிறார்.

* நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் டோக்கியோவின் ரென்கோஜி கோயிலிலிருந்து அது கொண்டுவரப்பட்டு, உறுதிப்படுத்தும் ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை. குறைந்தபட்சம், அந்த அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சிகள்கூட மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அது, அவரின் அஸ்தியே கிடையாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

* இரண்டாம் உலகப்போர் முடிவடைந்திருந்த தருணத்தில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஒரு நதிக்கரையோரம், தனது ஓட்டுநரிடம் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார் நேதாஜி, “நீ இப்போது இந்தியாவிற்குச் செல். நாம், ஒரு குறிப்பிட்ட நாளில், சுதந்திர இந்தியாவில் சந்திப்போம். நான் இப்போது உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்”.

பின்னாளில் அந்த டிரைவர் அளித்த உருக்கமான வாக்குமூலம்;

“நான், எனது அன்பிற்குரியவரை கடைசியாக சந்தித்தது அப்போதுதான். அதன்பிறகு, பர்மா தலைநகர் ரங்கூனில் குடும்பத்துடன் வாழ்ந்தேன். என்னால், அதற்கடுத்த காலகட்டங்களில் நேதாஜியைப் பற்றி எந்த தகவல்களையும் பெற முடியவில்லை. எனவே, அவர், பிந்தைய ஆண்டுகளில் இயற்கையான மரணம் அடைந்திருப்பார் என்று நம்பிவிட்டேன். நாங்கள் ரங்கூனிலிருந்து, பிறகு, இந்தியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டோம்”.

* சோவியத்தின் சைபீரியாவிற்குள் நுழையும் நேதாஜி, அந்நாட்டு அதிபர் ஸ்டாலினால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். சைபீரியாவின் கொடூரமான காலநிலையால், சிறையிலிருக்கும் நேதாஜி, சிறிது காலத்தில் இறந்துவிடுகிறார்.

* புதிய நாடான சுதந்திர இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்று கவலைப்படும் சோவியத் அதிபர் ஸ்டாலின், நேருவுடன் சுமூகப் போக்கை கடைபிடிக்க விரும்பி, நேதாஜி, தனது நாட்டில் இருப்பது குறித்து தெரியப்படுத்துகிறார். ஆனால், நேருவுக்கும் – ஸ்டாலினுக்கும் என்ன உரையாடல் நடந்ததோ தெரியவில்லை; நேதாஜி, இந்தியா திரும்பவேயில்லை.

* இதற்கிடையே, நேதாஜி, ரஷ்யாவில் அடைக்கலமாகியிருப்பது குறித்து, அன்றைய பிரிட்டன் பிரதமர் கிளமென்ட் அட்லிக்கு, நேரு இவ்வாறு கடிதம் எழுதுகிறார்;

“திரு.கிளமென்ட் அட்லி,

உங்களின் போர்க் குற்றவாளியான நேதாஜிக்கு, சோவியத் யூனியனின் தலைவர் ஸ்டாலின், அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்து வருகிறார். ஒரு உண்மையான நட்பு நாடு இப்படி செய்யலாமா? எனவே, இதை, நீங்கள்தான் கவனிக்க வேண்டும்”.

இவ்வாறு போகிறது அந்தக் கடிதம்.

* இதனிடையே, நேதாஜி, ரஷ்யாவில் இருப்பது குறித்தும், அவர் இந்தியா திரும்புவது குறித்தும், மெளன்ட்பேட்டன் பிரபுவுடன், அவரது நண்பரான நேரு ஆலோசனையில் ஈடுபட, “நேதாஜி, இந்தியா திரும்பினால், நீங்கள் பிரதமராக இருக்க முடியுமா? என்பதை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மெளன்ட்பேட்டன் ஆலோசனை தருகிறார்.

* நேதாஜி, சைபீரியாவுக்குள் இருப்பதை அறிந்த பிரிட்டன்-அமெரிக்க கூட்டு ரகசியப் படை, அங்கே ஊடுருவி, நேதாஜியைக் கொலை செய்கிறது.

* அதிபர் ஸ்டாலினின் இறுதி காலத்தில், சோவியத்திற்கான, இந்திய தூதராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், நேதாஜியை சந்திக்கிறார்.

* 1965ம் ஆண்டு நடந்த இந்திய – பாகிஸ்தான் போரின் முடிவில், அன்றைய சோவியத்தின் தாஷ்கண்ட நகரில், அந்நாட்டு முன்னிலையில், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அங்கே செல்லும் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, அந்நாட்டின் சிறப்பு அனுமதியின் பேரில், நேதாஜியை சந்திக்கிறார்.

அந்த சந்திப்பின்போது, “நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள். உங்களின் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு” என்று உறுதிமொழி அளிக்கிறார். ஆனால், அந்த சந்திப்பிற்கு பின்னர், இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, தாஷ்கண்டிலேயே மர்ம மரணம் அடைகிறார்.

* சுதந்திர இந்தியாவிற்குள் ரகசியமாக நுழைந்த நேதாஜி, கும்நமி பாபா என்ற பெயரில், உத்திரப்பிரதேச மாநிலத்தில், 1985ம் ஆண்டுவரை, ஒரு புகழ்பெற்ற சந்நியாசியாக வாழ்ந்து மறைந்தார். அவர்தான் நேதாஜி என்று பலரும் கருதினார்கள். அந்த யோகி யாரிடமும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

உண்மையில் அவர் யாரென்று அறிவது கடினமாக இருந்தது. அவர்தான் நேதாஜி என்று பரவிய தகவலால், நேருவின் அரசாங்கம், அவரை உளவு பார்த்தது. நேதாஜியின் ஓட்டுநராக இருந்தவர்கூட, பின்னாட்களில் இதைக் கேள்விப்பட்டு, நலம் விரும்பிகள் செய்த பண உதவியால், உத்திரப்பிரதேசம் சென்று, கும்நபி பாபாவை சந்தித்தாராம். ஆனால், அந்த ஓட்டுநரால், எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

– மதுரை மாயாண்டி