Random image

அகதிகள் முகாம் ஆன நெதர்லாந்து சிறைச்சாலைகள்

கடந்த சில ஆண்டுகளாகவே நெதர்லாந்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது. எனவே சீர்திருத்த மையங்கள் பலவும் தற்பொழுது மறுசுழற்சியாய் மற்ற காரியங்களுக்கு பயன்படுத்தப் பட ஆரம்பித்து விட்டன.
அதே போல் அந்நாட்டில் அதிகரித்து வரும் அகதிகள் எண்ணிக்கையை கையாள ” தஞ்சம் கேட்போருக்கான மத்திய அமைப்பு” தகுந்த தீர்வைக் கண்டுபிடித்தது. அதுதான் காலியாய் இருக்கும் சிறைச்சாலைகளை அகதிகள் முகாமாக மாற்றுவது.
புகைப்படத்துறையில் உயரிய பரிசுகளில் ஒன்றான புலித்செர் பரிசினை இருமுறை வென்ற ஒளிபடக் கலைஞர் முஹமது முஹைசன் ஆறு மாதங்கள் போராடி அனுமதிபெற்று கீழ்கண்ட காட்சிகளை படம்பிடித்து உள்ளார்.
பல்வேறு நாடுகளில் இருந்து தப்பி  தஞ்சம் பிழைத்து நுழையும் அகதிகளின் கதி என்ன என்று அவரை உறுத்தி வந்த கேள்விக்கு விடைகாண இந்த முயற்சியை அவர் எடுத்தார்.
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் குறித்து அவருக்கு கிடைத்த செய்தியை அவர் காண விழைந்தார். அவர் 12 நாடுகளில் இருந்து அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்த அகதிகளுடன் 40 நாட்கள் தங்கி அவர்களின் அனுபவங்களை கேட்டுணர்ந்தார்.

நெதர்லாந்து ஹார்லெமில் உள்ள டீ கோபெல் சிறைச்சாலையில் தன் அறையில் இருந்து எட்டிப்பார்க்கும் 19 வயது ஆப்கானிஸ்தான் அகதி

 

வடமேற்கு நெதர்லாந்தில், அகதி முகாமான சிறைச்சாலையில் உள்ள தன் அறையின் ஜன்னல் கண்ணாடி வழியே தன் குழந்தைக்கு வேடிக்கை காட்டும் ஆப்கன் அகதி.

 

நெதர்லாந்து ஹார்லெமில் உள்ள டீ கோபெல் சிறைச்சாலையில் பொதுவெளியில் ஓய்வெடுக்கும் 25 வயது ஈரான் அகதி ரேடா ஏஷன்

 

நெதர்லாந்து ஹார்லெமில் உள்ள டீ கோபெல் சிறைச்சாலையில் தன் மனைவி ஜெர்பியாவின் யின் புருவத்தை அலங்காரப்படுத்தும் ஈரான் அகதி யாசிர் ஹஜ்ஜி. இவர் இராக் யாசிதியில் சிகைஅலங்கார நிபுணராய் பணிபுரிந்தவர்.

 

நெதர்லாந்து ஹார்லெமில் உள்ள டீ கோபெல் சிறைச்சாலையில் புகைபிடித்து பொழுது கழிக்கும் அல்ஜீரியன் அகதி முஹம்மது பென் சலேம் மற்றும் லிப்யான் அமைன் ஓஷி.

 

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஓரினச்சேர்க்கையாளர் தம் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தப்பியோடி நெதர்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு அடைக்க்லம் கொடுத்தது நெதர்லாந்து. அவர் தன் அகதி அறையில் நிற்கின்றார்.

 

அகதி முகாமான சிறைச்சாலையில் உள்ள சலவை நிலையத்தில் தன் துணிகளை சுத்தம் செய்யும் ஆப்கன் அகதி சிராத்துல்லா ஹயத்துல்லா, வயது 23.

 

இங்கு தங்கி இருக்கும் காலத்தில் அகதிகள் டுட்ச் மொழி மற்றும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்கின்றனர். இது நெதர்லாந்தில் வாழ அத்தியாவசியமாகும். அங்கு உள்ள அனைவரும் மிகவும் பாதுகாப்பாய் உணர்கின்றனர். சிரியாவைச் சேர்ந்த அகதி கூறுகையில், ” ஒரு நாட்டின் சிறையில் அடைக்க கைதிகள் இல்லை எனும் செய்தி ஆர்ச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.  இதுதான் நான் வாழ விரும்பும் நாடு” என்றார்.

தமிழக அரசு பாடம் கற்குமா ?

நெதர்லாந்து அரசு, அந்நாட்டில் காலியாய் உள்ள சிறைச்சாலைகளை அகதிகள் முகாம் ஆக  மாற்றி,  அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. அதே வேளையில், இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி தமிழகத்திற்கு வந்துள்ள அகதிகளை த்மிழக அரசு எப்படி நடத்தி வருகின்றது? இங்கு இருப்பதை விட கடலில் சாவதே மேல் என ஆஸ்திரேலியா தப்ப முயன்ற அகதிகள் 1200 பேர் கடந்த ஜனவரியில் உயிரிழந்தனர்.  கடந்த மார்ச் மாதம் ரவீந்திரன் என்பர் தற்கொலை செய்துக் கொண்டார்.

சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழர்கள் “அகதிகள் ” என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை க்யூ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு மிகஅதிகம்.

 

 

ஈழத்தமிழர்களை சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பிக் பாக்கெட், வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர் சட்டத்தின் கீழும் சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படும் தனிமைச் சிறைக்கூடங்களில் அடைப்பது, முகாம்களில் வாழும் பெண்களைப் புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளைச் சிறப்பு முகாம்களில் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுவது, முகாம்களை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்க மறுப்பது, உண்மையான காரணங்களால் மாலை 6 மணிக்குள் வரத் தாமதமானால் தண்டனையளித்து, கீழ்த்தரமாக நடத்துவது என்று வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் சொல்லி மாளாதவை. இவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத காரணத்தினால்தான் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள் ஈழ அகதிகள்.

தற்பொழுதுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலையைச் சீர்திருத்தப்படுவது, முகாம்களில் வாழும் உறவுகளுக்கு இரட்டைக் குடியுரிமை அளிப்பது, உலகளாவிய அகதிகள் ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட அழுத்தம் கொடுக்கச் செய்வது போன்றவை தான் ஈழத் தமிழர்கள் இங்கே மற்ற எல்லோரையும் போல் நலமுடனும் வளமுடனும் வாழ வழிவகைக்கும்.

நெதர்லாந்திடம் இருந்து பாடம் கற்குமா தமிழக அரசு ?