சேலம்

சேலம் மாநகரில் உள்ள போஸ் மைதான நுழைவு வாயில் அகற்றப்பட்டது குறித்து நெட்டிசன் ஈசன் எழில் விழியன்  (ESAN D EZHIL VIZHIYAN) அவர்கள் முகநூல் பதிவு இதோ :

மீண்டும் இனி காணமுடியாத போஸ் மைதானம் நுழைவுவாயில்..!

சேலம் பழைய பஸ்ஸ்டேண்டை, ஸ்மார்ட் பஸ் ஸ்டேண்ட் ஆகும் திட்டத்தின், அங்கு இருந்த மணிக்கூண்டு,போஸ் மைதான நுழைவு வாயில் ஆகியவை முற்றிலும் தகர்த்து அகற்றப்பட்டுவிட்டன…!
” நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானம்” என்ற பெயரைத் தாங்கிய போஸ் மைதான நுழைவுவாயிலை நாம் மறக்கவே முடியாது…!
அண்ணாசிலை பின்பு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வாயில் தான் அரசுப்பொருட்காட்சிக்கும் நுழைவுவாயில் என்பதால் சேலம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்த நுழைவுவாயில் இது…!
மேலும் ஸ்மார்ட் பஸ் ஸ்டேண்ட் அமைந்த பிறகு போஸ் மைதானம் இருக்குமா? எந்த அளவு இருக்கும் என்பதால் இன்னும் தெரியவில்லை..!
சேலம் போஸ் மைதானத்தில் கூட்டம் நடத்திப் பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை..!
கூட்டம் பேச வரும் தலைவர்கள், இந்த நுழைவுவாயில் வழியாகத் தான் காரில் மேடை அருகில் செல்வார்கள் என்பதால், தலைவர்களை அருகில் காண இந்த நுழைவுவாயில் அருகே தொண்டர்கள் முண்டியடித்து நிற்பார்கள்..!
போஸ் மைதானத்தில் மாலை வேளைகளில் பெரியவர்கள் கூட்டம்கூட்டமாக அமர்ந்து நாட்டு நடப்பைப் பேசியபடி இருப்பார்கள்…!
மைதானத்தில் ஆங்காங்கே இருந்த கரும்புஜீஸ் கடை,சர்பத்கடை,கம்மங்கூழ் கடை வெயில் வேளைகளில் மக்கள் தாகம்,பசி தீர்த்தன..!


அகில இந்திய கைத்தறி கண்காட்சி, புத்தகக் கண்காட்சி இவையெல்லாம் வருடந்தோறும் போஸ் மைதானத்தில் தான் நடைபெறும்…!
மேல் மைதானத்தில் வரிசையாக டிராவல்ஸ் நிறுவனங்கள் இருந்தன..!
சந்தோஷ் டிராவல்ஸ் ரொம்ப பேமஸ்..!
சர்க்கஸ் என்றாலே போஸ் மைதானம் தான்…!
சர்க்கஸ் கூடாரம், விலங்குகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒரு கூட்டம் எப்போதும் நின்று கொண்டிருக்கும்…!
இரவில் வானில் வட்டமடிக்கும் சர்க்கஸ் லைட் போஸ் மைதான நினைவுகளில் முக்கியமான ஒன்று…!
தற்போது போஸ் மைதானத்தில் தார்ரோடு போட்டு தற்காலிக பஸ் நிலையம் இயங்கி வருகிறது என்றாலும்,
பல பல நீங்கா நினைவுகளைத் தந்த பழைய போஸ் மைதானம், மற்றும் இந்த கம்பீர நுழைவுவாயில் இவற்றை என்றும் நம்மால் மறக்க இயலாது..!
#ஈசன்எழில்விழியன்…!