காஷ்மீர் முன்னாள் முதல்வரை விடுவிக்கப் பிரார்த்திக்கும் ராஜ்நாத் சிங் : வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

டில்லி

காஷ்மீர் மாநில மூன்று முன்னாள் முதல்வர்களை விடுவிக்கப் பிரார்த்தனை செய்வதாகப் பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்ததற்கு நெட்டிசனகள் கிண்டல் செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370ஐ ரத்து செய்து அம்மாநிலத்துக்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  மேலும் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.   இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தின் மூன்று முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பல தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு பல தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர்.    ஆனால் இந்த மூன்று முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டும் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.   இதில் ஃபரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.   அத்துடன் அதே சட்டத்தின் கீழ் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா ஆகியோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “தற்போது காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.  அங்குள்ள நிலைமை வேகமாக முன்னேறி உள்ளது.   விரைவில் காவலில் உள்ள அரசியல் தலைவர்கள் விடுதலை குறித்து  முடிவு எடுக்கப்படும்.  அவர்களில் யாரும் துன்புறுத்தப்படவில்லை.

ஒரு சில நடவடிக்கைகள் காஷ்மீர் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளதால் அதை அனைவரும் வரவேற்க வேண்டும்.  விரைவில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் காவலில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்.  அம்மூவரும் வெளியே வந்ததும் காஷ்மீரில் நிலையை மேம்படுத்த உழைக்க வேண்டும் எனவும்  பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதற்கு டிவிட்டரில் நெட்டிசன்கள் அவரை மிகவும் கிண்டல் செய்துள்ளனர்.  ஒருவர், “ அமைச்சர் யாரிடம் பிரார்த்தனை செய்கிறார்? கடவுளிடமா, மோடியிடமா இல்லை அமித் ஷாவிடமா?” எனக் கேட்டுள்ளார்.  மற்றொருவர்,ராஜ்நாத் சிங் தாம் பாதுகாப்பு அமைச்சர் என்பதையே அறியாத ஒரு வெகுளி எனக் கிண்டல் செய்துள்ளார்.  மற்றொருவர் விரைவில் ராஜ்நாத் சிங்குக்காக மக்கள் பிரார்த்திக்க வேண்டும் எனப் பதிந்துள்ளார்.