இமான் – யுகபாரதி

காதலியை தங்கையாக வர்ணித்து பாடல் எழுதியிருப்பதாக திரைப்பாடலாசிரியர் யுகபாரதிக்கும் அப்பாடலுக்கு இசையமைத்த இமானுக்கும்  நெட்டிசன்கள் பலர், சமூகவலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், மன்மதராசா, காதல் பிசாசே என தொடர்ந்து தமிழக் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பாடல் எழுதிவருவதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள்.

“காதல் என்ற பெயரில் தங்களை சீண்டும் ஆண்களை, “அக்கா – தங்கையோடு பிறக்கவில்லையா” என்று பெண்கள் கேட்பது இயல்பு. ஆனால் இப்பாடலில், காதலியையே தங்கையாக வர்ணிப்பது கேவலம்” என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  மூத்த பத்திரிகையாளர் ஜெயந்தன் ஜேசுதாஸூம் தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து “ஏன் இவ்வளவு இழிவாக நடந்துகொள்கிறீர்கள்?” என்ற தலைப்பில் ஜெயந்தன் ஜேசுதாஸ் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:

“இசையமைப்பாளர் இமான் மீதும் பாடலாசிரியர் தம்பி யுகபாரதி மீதும் தனிப்பட்ட முறையில் தோழமை உண்டு. தோழமைக்கும் விமர்சனத்துக்கும் தொடர்பில்லை என்று நம்புகிறவன் நான். இருவரது கூட்டணியில் பல நல்ல பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இந்தமுறை அவர்கள் இழிவாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இழிவு நிகழ்ந்திருப்பது ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்காக.

தாய்மைக்கு அடுத்த இடத்தில் சகோதரிகளை வைத்துக் கொண்டாடும் பண்பாடு நம்முடையது. இது பச்சைத் தமிழர்களாகிய இமானுக்கும் யுகபாரதிக்கும் தெரியாதா என்ன?

ஜெயந்தன் ஜேசுதாஸ் அவர்களின் முகநூல் பதிவு

யுகபாரதி குத்துப்பாடல் எழுதுவதற்கென்ற பிறந்தவர் போலும். காதல் பிசாசே, மன்மத ராசா தொடங்கி காதலியை விதவிதமாக வருணித்து குத்துப்பாடல் எழுதி வருபவர்.

ஆனால் இந்த முறை எல்லை மீறி காதலியை ‘தங்கச்சி’ என்று வருணித்து எழுதியிருப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

நான் ஒன்றும் போலி பண்பாட்டு காவலன் அல்ல; நம் பண்பாட்டில் உறவுகளின் உன்னதம் கெட்டுவிடாத வகையில் அவற்றுக்குத் தரப்பட்டுவரும் இடத்தை யுகபாரதி இடம் மாற்றி எழுதியிருக்கிறார்.

’வெண்ணிலா தங்கச்சி வந்தா என்னப் பார்க்க..
கண்ணிலே மை வெச்சு போறாளே பூ பூக்க..’
– என்று பல்லவியைத் தொடங்கியிருக்கிறார்.

‘பட்டுப்புழுகூட உன் அழகைப் பார்த்துக் கெட்டு… கண்ணு ரெண்டு மூடியே புடவையாச்சு கட்டு… நீ தண்ணிக்குள்ள செந்தாமரை போல போல… என் நெஞ்ச ஒட்டி நில்லு நான் வாழ வாழ…அவளால என் மூச்சு மூச்சு… ஐய்யய்யோ தீ ஆச்சு ஆச்சு’ என்ற காமமும் கவித்துவமும் தெறிக்கும் வரிகளைச் சரணத்தில் வைத்துவிட்டு, காதலியைத் தங்கச்சி என பல்லவியில் அழைக்கும் இழிவான, இடறலான பிரயோகத்தைச் செய்திருக்கும் தம்பி யுகபாரதி, இந்த வார்த்தையை அனுமதித்த இமான், கொஞ்சமும் தயக்கமில்லால் பாடிய இருபால் பாடகர்கள்,

இதில் வெட்கமில்லாமல் நடித்து குத்தாட்டம் போட்ட அதர்வா, ரெஜினா, எல்லாவற்றுக்கும் மண்டையை ஆட்டியிருக்கும் அறிமுக இயக்குநர் ஓடம். இளவரசு ஆகிய அனைவரையுமே வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று ஜெயந்தன் ஜேசுதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “(பாடல்) மீட்டருக்காக வெண்ணிலாவின் தங்கச்சி என்பதை வெண்ணிலா தங்கச்சி என்று சுருக்கினால் என்னைப் போன்ற பண்பாட்டுப் பாமரர்கள் அதிர்ச்சி அடையவே செய்வோம் குணா. தம்பியிடம்தானே உரிமையுடன் சண்டை போடமுடியும். வெண்ணிலா என்கட்சி என்று இதை மாற்றமுடிந்தால் நல்லது”  என்றும் தெரிவித்துள்ளார்.