நெட்டிசன்:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இன்று மத்தியஅரசும் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது.

ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள் பணிக்கு வர தலைமை ஆசிரியர்கள் மூலம் பணிக்கப்பட்டு உள்ளனர்… இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது…

முதலில் எல்கேஜி, யுகேஜிக்கு மட்டும் விடுமுறை என தமிழகஅரசு அறிவித்ததாக அரசின் ஆணையும் வெளியான நிலையில், பின்னர் அது தடுத்து நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரை நிகழ்ச்சியில் இருந்த முதல்வர் எடப்பாடியிடம்  செய்தியாளர்கள் கேட்டதும், எல்கேஜி, யுகேஜி விடுமுறை தொடரும் என்றும், நாளை விரிவாக தெரிவிப்பதாக சமாளித்து விட்டுச் சென்றார்.

அதையடுத்து, மறுநாள், தமிழகம் முழுவதும் எல்கேஜி முதல் 5ம் வகுப்புவரை ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

ஆனால், அன்று இரவே தலைமையாசியர்களிடம் இருந்து அனைத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கும், நாளைக்கு பணிக்கு வர வேண்டும், மாணாக்கர்களுக்கு மட்டுமே விடுமுறை, உங்களுக்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது… 

இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு சென்றார்… ஆனால்  மாணவ மாணவிகள் இல்லாத நிலையில் அவர்கள் யாருக்கு பாடம் நடத்துவார்கள்… பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்…

நமது ஆட்சியாளர்களின் மேதாவித்தனத்தை நினைத்து வருந்தி, பள்ளிக்கு வந்து உண்டு உறங்கிவிட்டு சென்றுள்ளார்கள்….

இந்த நிலையில், இன்று மீண்டும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது…

இன்றைய அறிவிப்பிலும், பள்ளி ஆசிரியர்களுக்கு பணி இருக்கிறதா இல்லையா, அவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

ஒருவேளை நள்ளிரவு இது தொடர்பாக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலம் தலைமையாசிரி யர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் ஆசிரியர்களுக்கு தகவல் வரலாம் ….

தமிழக அரசின் இதுபோன்ற அறிவிப்புகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்…

‘ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க….’  என்று மாணவ மாணவிகள் இல்லாத நிலையில் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளது குறித்து   கலாய்த்துள்ளவர்கள்,

கல்வியறிவு இன்றி ஆட்சி செய்துவரும் கல்வி அமைச்சர் உள்பட பல அமைச்சர்களுக்கும்,  ஆட்சியாளர்களுக்கும் இந்த சமயத்தில், ஆசிரியர்கள் அவர்களுக்கு  கல்வியை போதிக்கலாம் என்று அறிவுரையும் கூறி வருகின்றனர்….

டாஸ்மாக் விற்பனைக்கு தடை விதிக்க மறுத்து, டாஸ்மாக் பாருக்கு தடை விதித்துள்ள தமிழக அரசையும் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்…

குடி உயர கோண் உயரும், கோண் உயர கோல் உயரும் (கோல் – நாடு) என்பது முதுமொழி… ஆனால், இன்றைய ஆட்சியாளர்களுக்கு  குடி என்பது டாஸமாக் மட்டுமே நினைவுக்கு வருகிறது… என்ன செய்வது… இது தமிழக மக்களின் அவலம்… என்று விமர்சித்து உள்ளனர்…

பல நெட்டிசன்கள் சில அமைச்சர்களை பெயரை குறிப்பிட்டும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர..

தமிழகஅரசின் இன்றைய அறிவிப்பு…

* மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

* அரசுத் தேர்வுகள் (10 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் – செய்முறைத் தேர்வுகள் (Practical) உட்பட) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.

* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.
* அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை ((Dry Ration) அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.