விவேக் ஒரு பழமை வாதி : பொங்கும் நெட்டிசன்கள்

சென்னை

திரைப்பட நடிகர் விவேக் அளித்துள்ள ஒரு அறிவுரை பல நெட்டிசன்களை அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்க வைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்.    அவர் தனது படங்களில் நகைச்சுவைக்கு இடையே பல சமுதாயக் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கம்.   இதை அவருடைய ரசிகர்கள் பெரிதும் விரும்புவதால் தொடர்ந்து அவர் அப்துல் கலாம்,  விவேகானந்தர் உள்ளிட்ட பலரின் கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறார்.

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு விவேக் ஒரு அறிவுரை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.   அதில், “அன்புள்ள மாணவர் செல்லங்களே, மற்றும் குழந்தைகளே.   கோடை விடுமுறையை நன்கு விளையாடி அனுபவியுங்கள்.   நிறைய தண்ணீரை உட்கொள்ளுங்கள்.   பெண் குழந்தைகள் தாயாருடன் அடுப்படிக்க் சென்று சமையலை கற்றுக் கொள்ளுங்கள்.  ஆண் குழந்தைகள் உங்கள் தந்தையின் அலுவலகத்துக்கு போய் அவருடைய பணியைப் பற்றி புரிந்துக் கொள்ளுங்கள்:  என பதிந்திருந்தார்.

இது நெட்டிசன்கள் பலரை பொங்க வைத்துள்ளது.  அவருடைய பதிவுக்கு பின்னூட்டமாக, “பெண் குழந்தைகள் என்றால் அடுப்படியில் சமைக்க வேண்டும்.   ஆண் குழந்தைகள் என்றால் அலுவலகம் செல்ல வேண்டும்.  இதுதான் உங்களின் பகுத்தறிவுக் கொள்கையா?  நீங்கள் வழக்கமாக கூறுவது போல ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை பெண் அடிமை மனநிலையில் இருந்து திருத்த முடியாதா?” என பலரும் பதிந்துள்ளனர்.

நடிகர் விவேக் இந்த பின்னூட்டங்களுக்கு இதுவரை பதில் அளிக்காமல் உள்ளார். அதனால் நெட்டிசன்கள் மேலும் மேலும் அவர் பதிவில் அவரை ஒரு பழமை வாதி எனக் கூறி கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி