நெட்டிசன்

 

க்கீரன் நக்கீரன் அவர்களின் முகநூல் பதிவு

 

நன்னிலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைவதை எதிர்த்து இன்று நடந்த கூட்டத்தில் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக மக்கள் முன் வாக்களித்துவிட்டு அதிகாரிகள் வெளியேறினர். காலை ஒன்பது மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணி வரை நடைப்பெற்ற போராட்டத்தின் முழு விபரம்:

காலை ஒன்பது மணி அளவில் நன்னிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒஎன்ஜிசி எண்ணெய் ஆலைக்குச் செல்லும் வழியை வழிமறித்து அமர்ந்தனர். ஓஎன்ஜிசி அதிகாரிகள் வர வேண்டும் என உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் தாமதமாக வந்து சேரவும் மழை பாதிப்பின் காரணமாகக் கூட்டம் மாப்பிள்ளைக்குப்பம் மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்றது. தொடக்கத்தில் தனது வழக்கமான பாணியில் அவர்கள் உரை நிகழ்த்தி முடித்தனர். பின்னர்ப் பொது மக்களில் சிலர் அடிப்படை கேள்விகளைக் கேட்க தொடங்கியதும் அதைச் சமாளிக்கும் திறமைப்பெற்ற அவர்கள் அவ்வாறே சமாளித்து முடித்தனர். ஆனால் கடைசியில்தான் அவர்களுக்குச் சோதனை வந்து சேர்ந்தது. இளைஞர்கள் சிலர் முன் தயாரிப்புடன் கொண்டு வந்திருந்த கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் திணறத் தொடங்கினர்.

நன்னிலத்தில் எண்ணெய் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வுதான் செய்ய வந்திருக்கிறோம். ஒருவேளை எண்ணெய் இல்லையென்றால் அந்த இடத்தைப் பழையபடி வேளாண் நிலமாக மாற்றிக் கொடுத்துவிடுவோம் என்றனர். உடனே நன்னிலம் பகுதியிலுள்ள புத்தகளூர், நெம்மேலி பகுதியில் தோண்டிய இடத்தை ஏன் அவ்வாறு செய்யவில்லை என்ற கேள்விக்கு இந்த ஏற்பாடு இப்போதுதான் வந்திருக்கிறது என மழுப்பினர்.

இந்தப் பகுதியில் கிணறுகள் தோண்டப்பட்டதில் எத்தனை கிணறுகள் செயற்பாட்டில் உள்ளன? எத்தனை கிணறுகள் மூடப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு இதுதான் முதல் கிணறு என்று பதில் அளித்தனர். அப்படியானால் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட அறிவிப்பை வெளியிட்டபோது நன்னிலம்1, நன்னிலம்2 என இரு இடங்கள் அறிவிக்கப்பட்டதே அப்படியானால் இது நன்னிலம் ஒன்றா அல்லது இரண்டா எனக் கேள்வி எழுப்பியபோது இதுதான் முதல் என்றனர். அப்படியானால் அந்த நன்னிலம்2 எது என்ற கேள்விக்கு இதுதான் அது என்று கவுண்டமணி செந்தில் வாழைப்பழ நகைச்சுவைக் கதையைப் போல் பதிலளித்துச் சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதிவரை அந்த நன்னிலம்2 கிணறு எதுவென்றே அவர்களால் சொல்ல முடியவில்லை.

இந்தக் கிணற்றுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்குப் பெற்றிருக்கிறோம் என்றனர். அதன் நகல் கேட்கப்பட்டது. தருகிறோம் என்றனர். பிறகு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு விண்ணப்பித்திருக்கிறோம் என்றனர். அனுமதி கிடைக்கும் முன் எப்படி வேலை தொடங்க வந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டு 45 நாட்களுக்குள் பதில் வராவிட்டால் அந்த வேலையைத் தொடங்குவதற்கு எங்களுக்கு அனுமதி உண்டு என்றனர். விண்ணப்பம் அளித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன என்ற கேள்விக்கு 2 ஆண்டுகள் என்றனர். அப்படி ஒரு விதிமுறை இருந்தால் அந்த நகல் வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்தக் கிணறு தோண்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஏன் தரவில்லை என்கிற கேள்விக்கு இனி தருகிறோம் என்றனர். இந்த அறிக்கையைத் தொடர்ந்து மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, அதை ஏன் நடத்தவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலோ மாயாஜால படத்தையும் விஞ்சியது. இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தி முடித்துவிட்டோம் என்றனர். இந்தப் பதில் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. அங்குக் கூடியிருந்த அத்தனை ஊர் மக்களுக்கும் தெரியாமல் அந்த மர்மக் கூட்டம் எப்போது நடந்தது என்றே தெரியவில்லை. அதன் விபரங்கள் கேட்டபோது அதையும் அளிக்கிறோம் என்றனர்.

இன்னும் ஏழு கேள்விகள் பாக்கி இருந்தபோது தொடர்ந்து தொழில்நுட்பக் கேள்விகளாக எழுப்பபடுவதை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் அந்தக் கேள்விகள் அத்தனையையும் எழுத்தில் வாங்கிக்கொண்டு பின்னர்ப் பதில் அனுப்புவதாகக் கூறினர். அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்று அதனை மக்கள் பரிசீலித்துக் கருத்து சொல்லும்வரை ஓஎன்ஜிசி நிறுவனம் தன் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மக்கள் வலுவான ஒற்றுமையுடன் இருந்த காரணத்தால் வேறு வழியின்றிப் பணிகளை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் மக்கள் முன் அறிவித்தனர். மீறினால் தடுத்து நிறுத்துவோம் எனவும் மக்கள் அறிவித்தனர். இந்த வெற்றி தற்காலிகமானதுதான் என்பதையும் இன்னமும் போராட்டம் இருக்கவே செய்யும் என்பதையும் இப்பகுதி மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

கொட்டும் மழையிலும் மக்கள் ஆதரவைத் திரட்ட இரவும் பகலுமாக அலைந்து திரிந்து எண்ணிக்கையில் சொற்ப அளவில் இருந்தாலும் வெறும் நான்கே நாட்களில் இந்தப் போராட்டத்தைக் கட்டமைத்த நன்னிலம் வட்டார இளைஞர்களின் சாதனை போற்றத்தக்கது. இவர்களே இப்போராட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!