வாஜ்பாய் அரசு ஈழ ஆதரவு அரசா? – வைகோ பொய்யும் நடந்தவையும்..

நெட்டிசன்:

PACKIARAJAN SETHURAMALINGAM அவர்களது முகநூல் பதிவு:

“கடந்த வாரம் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை நலம் விசாரித்துவிட்டு வந்ததை பற்றி வைகோ அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையில் வாஜ்பாயி அரசாங்கம் ஈழப்போராட்டத்திற்கு உதவியதாக மீண்டும் கூறியிருக்கிறார். வைகோ கூறுவது போல் “முந்தைய பாஜக அரசு உண்மையில் ஈழப்போராட்டத்திற்கு துணை நின்றதா?” என்ற அறிய நான் முன்னர் எழுதிய கட்டுரையை மீள் பதிவு செய்கிறேன். (இக்கட்டுரை வைகோ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்து பிறகு வெளியே வந்து வாஜ்பாயி அரசாங்கம் போல் மோடி அரசாங்கம் இல்லை என்று பேட்டிகள் கொடுத்த பொழுது எழுதியது). ஆதாரத்துடன் கடந்த கால நிகழ்வுகளைத் தொகுத்திருக்கிறேன், வைகோ ஏன் அந்தப் பொய்யை திரும்ப திரும்பக் கூறுகிறார் என்று முழுவதையும் படித்தால் அறிந்துகொள்வீர்கள். ஈழப் போராட்டத்தில் வைகோ அவர்களின் திருகு வேலையில் ஒரு சதவீதம் தான் இது. “முந்தைய பாஜக அரசு உண்மையில் ஈழப்போராட்டத்திற்கு துணை நின்றதா?”

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி என்ற சந்தர்ப்பவாத இழிமுடிவிற்கு சப்பைக்கட்ட, பாஜகவிற்கு ஈழ ஆதரவு வேடமிட்டு பவனி வந்த அய்யா வைகோ முதல் ஆளாக சென்று கூட்டணியும் வைத்துவிட்டு அந்த வேடம் கலைந்ததும் தேர்தலில் வெற்றிகிட்டாத, பாஜக அரசில் எந்த பதவியும் கிட்டாத நிலையில், இருக்கிற அரசியலில் “தலை தப்பவேண்டுமே” என்று பதறி முதல் ஆளாக அக்கூட்டணியை விட்டு வெளியேறியும் வந்துவிட்டார். “1996- 2004 வரை நடந்த வாஜ்பாய் அரசாங்கம் கடைபிடித்த வெளியுறவு கொள்கைகளை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் என்று நம்பினேன் அனால் தற்போதைய மோடி அரசு அதை பின்பற்றாததால் தான் வெளியேற நேரிட்டது” என்கிறார். கடந்த கால இந்திய அரசியல் சூழல்களில், அய்யா வைகோவின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை சந்தேகித்ததில்லை. அவர் தொடர்ச்சியாக ஈழ தமிழர் நலன் சார்த்த நிலைபாட்டில் இருந்திருக்கிறார் என்று தான் எண்ணியிருந்தோம், ஆனால் தன் தேர்தல் கூட்டணி பாதுகாப்பிற்காகவும், பாராளுமன்ற பதவி இருத்தலுக்காகவும் அவர் எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது நாம் பின்னோக்கி பார்ப்பது அவசியமாகிறது. தேர்தலுக்கு முன் பாஜகவிற்கு ஈழ ஆதரவு வேடமிட்டது மட்டுமல்லாமல் இன்றைக்கு வரை முந்தைய வாஜ்பாய் அரசு ஈழ ஆதரவு அரசாக செயல்பட்டதை போல் பிம்பம் கட்டி பேசிவருவது அபத்தத்தின் உச்சம்.

இந்த நூற்றாண்டின் பேரவலமான தமிழீழ இனப்படுகொலையின் கூட்டு பங்காளர்களான பாஜகவின் முந்தைய நடவடிக்கையை மறைக்க நினைக்கும் அய்யா வைகோவின் சந்தர்ப்பவாதத்தை எதிர்க்கவேண்டியது நம் அனைவரது கடமை என்ற அடிப்படையில் “காங்கிரஸ் அரசிற்கும் முந்தைய பாஜக அரசிற்கும் ஈழம் சார்ந்த கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை” என்பதை நிரூபிக்கவே இந்த கட்டுரை. தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்பின் அடிப்படையில், எந்த கற்பனை கட்டு கதைகளையும் கலக்காமல் உண்மை செய்தியின் அடிப்படையில் ஆராயவேண்டும் என்பதை உணர்ந்தே எழுதப்பட்டது.

2008யில் நான்காம் கட்ட ஈழப்போர் உக்கிரமாக தொடங்கிய பிறகு இலங்கை – இந்திய அரசு கூட்டு சதி செய்து தமிழர் உரிமை போராட்டத்திற்கு எதிராக எவைகளை எல்லாம் நிகழ்த்தியது என்பதை யாம் அறிவோம், அதிலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி செய்த துரோகங்களை யாம் மறக்கயியலாது. தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் பலர் அதை பேசி, எழுதி அறிந்து கொள்ள செய்தார்கள். இணைய உபயோகத்தின் வீச்சும் அதற்கு உதவியது. ஆனால் அதற்கு (2008) முன்னர் நடந்த இந்திய இலங்கை உடன்படிக்கைகள், இந்திய இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு நிகழ்ந்த துரோகங்கள் பற்றி தேடி படித்து தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதால் அதை சாதகமாக்கி வைகோ போன்றவர்கள் மேடையில் பொய்யை மீண்டும் மீண்டும் பேசி உண்மையாக்க பார்க்கிறார்கள். தங்கள் அரசியல் லாபத்திற்காக கற்பனை செய்திகளை கட்டமைத்து தொடர்ந்து பரப்புவதனால் அவை சில காலத்திற்கு பின் உண்மையாகி பலன் அளிக்கும் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் மேடையில் முழங்குபவர்களுக்காகவே சில வரலாற்று நிகழ்வுகளை பின்னோக்கி பார்த்து ஆராய வேண்டிய தேவையும் உருவானது.

2௦௦௦ ஆண்டு ஆரம்பவாக்கில், விடுதலை புலிகள் இயக்கம் ஆனையிறவு போருக்கான வியூகம் வகுத்த கால கட்டத்தில், அவர்களுக்காக ஆயுதங்கள் ஏற்றிவந்த கப்பலை இந்திய உளவு நிறுவனமும், கடற்படையும் மடக்கி தடுத்ததாகவும், அந்த தகவலை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இரவோடு இரவாக அய்யா வைகோவிடம் தெரிவித்தாகவும், அதனடிப்படையில் அன்றைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டாஸிடமும், அன்றைய பிரதம அமைச்சர் வாஜ்பாயிடமும் முறையிட்டதாகவும், அந்த கோரிக்கையின் அடிப்படையில் அதன்பிறகு அனைத்து ஆயுதக்கப்பல்களும் தடுக்கபாடாமல் கடற்கரை ரோந்து படைகள் பின்வாங்கபட்டு இந்துமா சமுத்திரம் திறந்து விடப்பட்டதாக அய்யா வைகோ தொடர்ந்து உரைத்து வருகிறார்.(https://www.youtube.com/watch?v=nj7zD2LFIx0).அப்படி ஒரு சந்திப்பு நடந்ததா என்ற கேள்விக்குள் போகவேண்டாம் அப்படியே நடந்திருந்தாலும், அதன் பிறகு அன்றைய அதன் பிறகு அன்றைய இந்திய பாஜக அரசு ‘விடுதலை புலிகளின் கப்பலை தடுக்கவில்லை, பாஜக ஆட்சி தமிழீழத்திற்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தந்தது’ என்ற சொற்பதத்தின் உண்மை அறியவே விரும்பிகிறோம். இது எவ்வகையில் நியாயத்தன்மை உடையது என்பதை உறுதி செய்ய சில செய்திகளை பின்னோக்கி தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனையிறவு போரில் விடுதலைப் புலிகளின் பாரிய வெற்றி, அன்றைய ‘பாஜக அரசாங்கத்தின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் சாத்தியமானது’ என்பது போன்ற பரப்புரையின் உண்மை தன்மை அறிய, அன்றைய காலகட்டத்தின் சில நிகழ்வுகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒரு வீரம் செறிந்த விடுதலைப் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படை நடவடிக்கையில் உயிர் துறந்த போராளி செல்வங்களின் நெஞ்சுரத்தை, எவரும் தம் கூட்டணி நலனுக்காக திரித்துவிட கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

1999ஆம் இறுதியில் 2௦௦௦ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய இலங்கை அரசுகளுக்குடனான ‘கட்டற்ற வணிக ஒப்பந்தம்’ (Free Trade Agreement) கையெழுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதன் முதலாக வாஜ்பாய் அரசாங்கம் தான் இலங்கையோடு ‘கட்டற்ற வணிக ஒப்பந்தம்’ செய்த இந்திய அரசாங்கம்(http://www.hcicolombo.org/uploads/page_files/hb-india-sl.pdf). அதற்கான வரைவு தயாரான நிலையில் இந்திய சந்தைக்கான பொருளீட்டி பகடைக்காயாக இலங்கை மாற்றப்பட வேண்டும் என்ற முதலாளிகளின் எண்ணத்தை நிறைவேற்றும் அவசரகதியில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இரு நாடுகளுக்குடனான வணிக பரிவர்த்தனை ஒப்பந்தங்கள் கைமாற்றிக்கொள்ளபட்டன (http://commerce.nic.in/trade/international_ta_indsl_1.asp). இந்த ஒப்பந்த உடன்படிக்கையின் விளைவாக இலங்கை ஏற்றுமதி விகிதாசாரம் அவ்வாண்டுமட்டும் 342% சதம் உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாய் அனைத்து உள் மற்றும் வெளிவிகார நடவடிக்கைகளிலும் அன்றைய இந்திய பாஜகவின் துணையோடு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் இரு இலங்கை அரசு உறுதியேற்க்கிறது. அதை நல்லெண்ண அடிப்படையில் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் கையாள்வோம் என்று வாஜ்பாயின் தலைமையிலான இந்திய பாஜக அரசு இன்முகதுடன் ஏற்றுக்கொள்கிறது.

அந்த நிலையில் ஓயாத அலைகள் என்ற பெயரில் நவம்பர் 1999யில் அரசப்படைகள் கைப்பற்றியிருக்கும் இடங்களை மீட்க சமர் நடவடிக்கையை தொடங்குகிறார்கள் புலிகள். ஓயாத அலைகள் நடவடிக்கை வன்னிப் பெருநிலப்பரப்பில் பெரும் இராணுவ வெற்றிகளை ஈட்டியவேளை புலிகளின் அடுத்த இலக்கு ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தின் மீதான தாக்குதல்கள்தான் என்பது உணரப்பட்டதாகவே இருந்தது. ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் விடுதலை புலிகளின் பாரிய ஆனையிறவுப் படைத்தள தாக்குதல் நடகிறது, அதில் புலிகள் பெரு வெற்றி பெறுகிறார்கள். ராணுவ ரீதியாக மிக பலமான அமைப்பாக விடுதலை புலிகள் உருப்பெறுகிறார்கள். ஆனையிறவை மீட்ட யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்தனர் புலிகள். ஆனையிறவின் தோல்வியும், உளவியல் ரீதியான பெரும் அடியிலும் இருந்த இலங்கை செய்வதறியாது திகைத்து நின்றது. 40000 மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் புலிகளால் சுற்றி வைக்கப்பட்டனர். எந்த நிமிடமும் யாழ்ப்பாணம் புலிகள் வசம் வரலாம் என்ற நிலை இருந்தது. வட இந்திய ஊடகங்கள் பெருங்குரலெடுத்து அழ தொடங்கின. புலிகளை இதற்கு மேல் ஒரு அங்குலம் வர விட்டாலும் இந்தியாவிற்கு ஆபத்து என்று வெளிப்படையாக எழுத தொடங்கின.(http://indiatoday.intoday.in/story/elephant-pass-capture-by-ltte-a-major-reverse-for-sri-lanka-could-signal-jaffnas-fall/1/244067.html). இலங்கை இந்தியாவிடம் ராணுவ உதவியை எதிர்ப்பார்ப்பதாகவும், இந்தியா ராணுவரீதியாக உதவி செய்யவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் குரலாக கெஞ்சின.

இந்நிலையில் மே 3 ஆம் தேதி இலங்கை வெளியிறவு துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் டெல்லி வந்து வாஜ்பாயியையும் ஜஸ்வந்த் சிங்கையும் சந்திக்கிறார்(http://www.rediff.com/news/2000/may/03akd1.htm). அன்றே கூட்டணியில் இருக்கும் தமிழக கட்சிகள் எதையும் அழைக்காமல் பாஜக அரசு வாஜ்பாய் தலைமையில் கேபினட் கூட்டத்தை கூட்டி இலங்கை விரும்பினால் மனிதநேயத்தின் அடிப்படையில் உதவிகள் செய்வோம் என்று அறிவிக்கிறது மத்திய அரசு. பிறகு தான் இலங்கை நிலவரம் தமிழக நிலவரம் பற்றி ஆலோசிக்க தமிழக முதல்வர் கருணாநிதியை வாஜ்பாயி அழைக்கிறார். மே 5 ஆம் தேதி டெல்லி விரைந்த கருணாநிதி வாஜ்பாயியை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து இந்திய அரசின் கைகளை நாங்கள் கட்டவில்லை அதே நேரம் பழைய சம்பவங்களை நாம் மறக்ககூடாது என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்புகிறார் (http://www.outlookindia.com/article/Metamorphosis-Of-Belief/209464). கருணாநிதி சந்திப்பை அடுத்து தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்த மற்ற தமிழக கட்சிகளான மதிமுகவும் பாமகவும் பாஜக அரசு ராணுவ ரீதியான எந்த உதவியும் செய்யகூடாது, IPKF சென்றதை போல கசப்பான முடிவுகளை பாஜக எடுக்க கூடாது என்று வலியுறுத்தின. மே 8 ஆம் தேதி இலங்கை நிலவரம் குறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது பாஜக.

ஒரு பக்கம் ராணுவ உதவி செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டு மறுபக்கம் ஒரு நாள் முன்னதாகவே மே 7 அன்றே விமானப்படை தளபதி டிப்னிசை இலங்கைக்கு ஆறு நாட்கள் நல்லெண்ணப்பயணம் என்ற பெயரில் அனுப்பியது இந்திய பாஜக அரசு.(http://www.hindu.com/2000/05/08/stories/01080003.htm). இச்செய்தி அறிந்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்படுகிறது. டெல்லி சென்று திரும்பிய கருணாநிதி, தலையை ஒருபக்கமும் வாலை ஒருபக்கமும் நீட்டி இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பக்கூடாது என்று சட்டசபையில் பேசிவிட்டு தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையையும் எடுக்க ஆரம்பிக்கிறார். மே 7 ஆம் தேதி “இன்று ஆனையிறவு நாளை யாழ்ப்பாணம்” என்று சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு அச்சடித்த அச்சக உரிமையாளர் உட்பட ஒட்டிய பெரியார் திராவிடர் கழகத்தினர் 1௦ பேரை கைது செய்கிறார். அதே நாள் சிதம்பரத்தில் ஈழத்தமிழர் அவலங்கள் பற்றிய கருத்தரங்கம் நடத்தவிருந்த அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 250 பேரை கைது செய்து கருத்தரங்கத்திற்கு தடை விதிக்கிறார்.(http://tamil.oneindia.in/news/2000/05/07/nedumaran.html) அதற்கு முன் இதே கருத்தரங்கை திருவாரூர், திருச்சந்தூர், ராணிப்பேட்டையில் நடத்திய பொழுது அனுமதித்த கருணாநிதி டெல்லி சென்று ஆலோசனை நடத்தி திரும்பிய பின் புலிகள் 40 ஆயிரம் ராணுவத்தினரை சுற்றி வளைத்துள்ள இந்நிலையில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் மாநாடுநடத்தக்கூடாது என்று தமிழக போலீசார் 144 தடையுத்தரவு போட்டு தமிழீழ ஆதரவை ஒடுக்க ஆரம்பிக்கிறார்.

லக்ஸ்மன் கதிர்காமர் இந்தியா வந்ததும், கூட்டணியில் இருக்கும் ஈழ ஆதரவு தமிழக கட்சிகளை அழைக்காமல் கேபினெட் கூட்டி மனிதநேய உதவி என்று சொன்னதும், கருணாநிதியை அழைத்து ஆலோசித்து அதன் பின் அவர் தமிழீழ ஆதரவை ஒடுக்க ஆரம்பித்ததும், ராணுவ விமானப்படை தளபதியை அனுப்பிவிட்டு ராணுவ உதவி இல்லை என்று வெளியில் காட்ட அனைத்து கட்சி கூட்டியதும், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசும் இலங்கை அரசும் இணைந்து புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட 40000 இலங்கை ராணுவத்தினரை காப்பாற்றத்தான் என்பதை யாரும் சொல்லி தெரியத்தேவை இல்லை.

அதன் பின் அதே வருடம் ஜூன் மாதம் 3ஆம் தேதி கருணாநிதி தன் பிறந்தநாள் விழாவில் இலங்கையிலும் செகச்லோவோகியா போல் பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஏற்பட பாஜக அரசு உதவ வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார். (http://tamil.oneindia.in/news/2000/06/06/possible.html) உடனே அதனை இலங்கை அரசாங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இலங்கை நாட்டை பிரிக்க எண்ணினால், இந்தியா பிரிந்து போகும்’ என்று எச்சரிக்கிறார் இலங்கை யின் அமைச்சர் மங்கள சமரவீரா. உடனே பாஜக அரசாங்கம் கருணாநிதி சொன்னது இந்திய அரசின் கருத்தில்லை என்று தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜூன் 11ஆம் தேதி அன்றைய வெளி விவகார துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கை செல்கிறார், இலங்கைக்கு 100 மில்லியன் டாலர் இந்திய அரசால் இலங்கையின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் தாரைவார்க்கப்படுகிறது. அது தான் இந்திய அரசாங்கம் முதன் முதலாக இலங்கை அரசுக்கு கொடுத்த இனாம். அவ்வளவு பெரிய அளவிலான தொகையை இந்தியா அதற்குமுன்னர் எந்த நாட்டுக்கும் கொடுக்கவில்லை. அன்றைய தேதிக்கு இலங்கை ரூபாய் மதிப்பிற்கு அது 1000 கோடி ரூபாய். அவ்வளவு பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் ‘இலங்கை தீவை துண்டாட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒற்றை இலங்கைக்குள் தீர்வு என்பதே இந்தியாவின் முடிவு’ என்று ஜஸ்வந்த் சிங் திட்டவட்டமாக அறிவிக்கிறார். (http://news.bbc.co.uk/2/hi/south_asia/791132.stm). அதை எதிர்த்து அன்றைய காலகட்டத்தில் ஈழத்தை ஆதரிக்கும் வைகோ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அறிக்கை முலம் கண்டிக்கிறார்கள். ஆனாலும் கூட்டணியில் தொடருகிறார்கள்(!).

அதே ஜூன் 11, சென்னை ஆவடிக்கு ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகிறார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவரிடம் நிருபர்கள் தமிழக கட்சிகளின் எதிர்ப்பு பற்றி கேட்கிறார்கள், அதற்கு ‘இப்பிரச்சனையில் மத்திய அரசு தெளிவான நிலை எடுத்திருக்கிறது’ என்று சொல்கிறார். அத்தோடு ‘மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறார். (http://tamil.oneindia.in/news/2000/06/15/george.html). அதை தொடர்ந்தே ஜூலை 1, 2 தேதிகளில் அய்யா வைகோவின் மதிமுக, ‘தமிழர் எழுச்சி மாநாட்டை’ ஈரோட்டில் நடத்துகிறது. அம்மாநாட்டில் அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், முக்கிய தலைவர்களும், சில மாநில முதல்வர்களும், கலந்து கொள்கிறார்கள். அன்று நடந்த பேரணியில் ஈழம்/இலங்கை சார்ந்த முழக்கங்கள் குறைக்கப்பட்டு, தமிழகம் சார்ந்த கோரிக்கைகள் முழங்கப்படுகிறது (http://tamil.oneindia.in/news/2000/07/01/started.html). அக்கூட்டதில் அத்வானி மிகத்தெளிவாக, நிதானமாக ‘இலங்கையில் தமிழர்களுக்கு அமைதியும் நீதியும் கிடைக்க பாடுபடுவோம், இலங்கையின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காமல் தமிழர்கள் மானத்தோடும் மரியாதையோடும் வாழ அனைத்து வழிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்” என்கிறார். அதன் பிறகு உரையாற்றிய அய்யா வைகோ ‘நான் பேசுவதை அளந்து தெளிந்து பேசுகிறேன், வாஜ்பாய் அரசாங்கத்தை நான் இலங்கையை பிரிக்க நிர்பந்திக்கவில்லை, ஆனால் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையால் அப்படி ஒரு நாடு உருவானால் அதற்கு பாஜக அரசு என்ன செய்ய முடியும்’ என்று நாசுக்காக உரைத்தார். அத்தோடு ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அந்நாட்டுக்கு உதவுவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்ற தீர்மானமும் நிறைவேற்றினார் (http://tamil.oneindia.in/news/2000/07/02/resolutions.html). இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஜூன் 11 அன்று இலங்கைக்கு நூறு மில்லியன் டாலர் கொடுத்த இந்திய பாஜக அரசுக்கு ஜூலை1 அன்று நடைபெற்ற மாநாட்டு தீர்மானத்தில் நன்றி சொல்லப்படுகிறது. வெறும் 15 நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை மறைத்து அய்யா வைகோ மக்களை எப்படி எல்லாம் முட்டளாக்கியிருக்கிறார் என்று யோசிக்கும் பொழுது மனம் கொதிக்கிறது.

ஆனையிறவு வெற்றிக்கு பிறகு விடுதலை புலிகள் மிக பலம்வாய்ந்திருந்த காலகட்டத்தில், இந்திய பாஜக அரசு இலங்கைக்கு இனாமாக கொடுத்த நூறு மில்லியன் டாலரை சந்திரிக்கா அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியிருக்கும் என்பதை நாம் எளிதில் யூகிக்க முடியும். அந்த காலகட்டமே ஒட்டுமொத்தமாக இந்திய அரசின் வெளி விவகாரக் கொள்கை தமிழர் நலனில் அக்கறையின்மை என்ற போக்கில் இருந்து சிறிது முன்னேறி, தமிழின எதிர்ப்பு அல்லது அழிப்பு என்ற நிலையை பற்றி பயணிக்க முடிவெடுத்தது. இனாமாக பெற்ற நூறு மில்லியன் டாலர் இலங்கை அரசால், சர்வதேச நாடுகளுடனான ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும், ஆயுத கொள்முதலுக்கும் கனகச்சிதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்திய ஆளும்வர்க்க நலன் சார்த்த நிலைப்பாடுகளை முடிவெடுத்து நிகழ்த்தி காட்டும் அதிகார மையங்களின் ஆலோசனைப்படி, இலங்கை அரசின் ராஜதந்திர அணுகுமுறையின் அனுகூலங்கள் துளிர்த்து, அவ்வரசு மற்றும் அரசுசாரா பல்வேறு பொறுப்பாளர்கள், பல்வேறுபட்ட நாடுகளில் சுற்று பயணம் மேற்கொள்ளுகின்றனர். இதை எல்லாம் விட பாஜக அரசாங்கம் எப்படி மிக வஞ்சகமாக தமிழர்களை ஏமாற்றியிருக்கிறது என்பதற்கு ஒரு சம்பவத்தை குறுப்பிட வேண்டியிருக்கிறது..

மெருகேற்றப்பட்ட இந்திய இலங்கை ராஜதந்திர மற்றும் தமிழின எதிர்ப்பு ரகசிய உடன்படிக்கை உருவான காலகட்டமது. அதன் தொடக்கமாக ஆண்டு ஆகஸ்ட் மாதமே INS சரயு என்ற 90 கோடி மதிப்புள்ள ரோந்து கப்பலையும் ஆகாயமார்க்கமாக வேவு பார்க்க மூன்று செடக் உலங்கு ஊர்தியையும் இந்தியா வலிய சென்று இலங்கைக்கு வழங்குகிறது. (http://en.wikipedia.org/wiki/Sukanya-class_patrol_vessel) (http://www.bannedthought.net/India/PeoplesMarch/PM1999-2006/archives/2002/june2k2/srilanka.htm). இந்தியா ராணுவ தளவாடங்கள் முதல் முறையாக இலங்கைக்கு விற்கப்படும் வணிக நிகழ்வு இது. அன்றைய இந்திய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கம் தான் முதலில் இலங்கைக்கு ராணுவரீதியான உதவியையும் இரு நாடுகளுக்குடனான ராணுவத் தளவாட வணிகத்தையும் தொடங்கி வைத்தது. அடுத்ததாக டிசம்பர் மாதம் தாம் கொடுத்த ரோந்து கப்பல்களை பணிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தகுந்த இயக்கிகளை உருவாக்க இலங்கையை சேர்ந்த 200 சிங்கள கடற்ப்படையினருக்கு பயிற்சியும், பயன்பாட்டு பயிலரங்க உத்தரவும் வழங்குகிறது. (http://www.hindu.com/2000/12/10/stories/03100008.htm). மேற்கண்ட தளவாடங்களே பிற்காலங்களில் இந்துமா சமுத்திரத்தின் இலங்கை கடற்ப படையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. மேலும் விடுதலைப்புலிகளின் ஆயுத கப்பல்கள் பெருமளவு தடுத்து நிறுத்தி நாசப்படுத்த பயன்பட்டது.

வாஜ்பாய் அரசங்காத்தின் ஈழ நிலைப்பாடு இவ்வளவு மோசமாக இருக்க அய்யா வைகோ தொடர்ச்சியாக ‘அன்றைய பாஜக அரசாங்கம் சரியாக இருந்தது இன்றைக்கு இருக்கும் மோடி தலைமையிலான அரசு தான் சரியில்லை’ என்று பேசுவது அப்பட்டமான மோசடி. அதை எல்லாம் விட அய்யா வைகோவின் சகிக்க முடியாத துரோகம் என்னவெனில் 2000 ஆண்டு இந்திய ராணுவ அமைச்சகம் முதன் முதலாக இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் பொழுது அய்யா வைகோ இந்திய அரசின் பாதுகாப்பு குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தது தான்(http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=498&lastls=13). தமிழர்களுக்கு எதிரான போரில் பயன்படுத்தக்கூடிய ராணுவ தளவாடங்களை இந்திய அரசு வழங்கும் பொழுது உள்ளிருந்து கொண்டு அதை எதிர்க்காமல் இருந்ததுவிட்டு இப்பொழுது வந்து மற்றவர்களை பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று பேட்டி கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் வீழ்ந்துவிடும் என்று எல்லா ஊடகங்களும் எழுதி தீர்த்த பொழுது, கருத்துகணிப்புகள் வெட்டவெளிச்சமாக காட்டிய பொழுது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைபடுத்தப்பட்டு நடிகர் கார்த்திக்கின் கட்சியோடு தான் கூட்டணி சேர முடியும் என்ற கீழ் நிலையில் இருக்கும் பொழுது காங்கிரசை வீழ்த்த வேறு வழி தெரியாமல் பாஜகவோடு கூட்டணி வைத்தேன் என்பதெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பதென்று தெரியவில்லை. ஒருவேளை இந்திய அளவில் வீழ்த்துவதை பற்றி சொல்கிறார் என்று எண்ணினாலும் இவருக்கு கொடுக்கப்பட்டதோ வெறும் 7 சீட்டுக்கள் இவர் வேறு மாநிலத்திற்கும் சென்று ஆதரவு பிரச்சாரம் செய்யவில்லை என்பதால் அதுவுமில்லை. அத்தோடு வாஜ்பாய் அரசின் நிலைப்பாடும் காங்கிரசின் அரசின் நிலைபாடும் ஒன்று தான் எனும்பொழுது அய்யா வைகோ பாஜகவோடு கூட்டணி வைத்தது அவரது சுயலாபத்திற்காகத்தான் இன்று வெளியே வந்ததும் கூடா கூட்டணியினால் தன் கட்சியின் ஈழ ஆதரவு பிம்பம் உடைந்துவிடக்கூடாது என்ற சுயலாபத்திற்காக தான் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.