நியூட்ரினோ ஆய்வு பணிகள்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு மேல்முறையீடு

டில்லி:

நியூட்ரினோ ஆய்வு பணிகள் நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு செய்துள்ளது.

தமிழகத்தில் மதுரை அருகே தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ  ஆராய்ச்சி செய்ய கடந்த 2011ம் ஆண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், இந்த ஆய்வகம் அமைத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,  சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்  என்று பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்தவழக்கில், நியூட்ரினோ ஆய்வகம் தொடங்க அனுமதி மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்திருந்தது. இது தொடர்பாக டாடா நிறுவனம் மீண்டும் மத்திய அரசை நாடியதை தொடர்ந்து,  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வுப்பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கி உள்ளது.

இது கடும் அதிருப்தி ஏற்படுத்திய நிலையில்,  ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை  விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதி மனற்த்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில்,  நியூட்ரினோ திட்டம் தொடர்பாக நிபுணர் குழு, பல்வேறு துறைகளின் நிபுணர்களை கொண்டு பரிசோதனைகள் நடத்துமாறு அளித்த பரிந்துரைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்தில் கொள்ளாமல் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பல்வேறு அரிய உயிரினங்கள், அரிய தாவரங்கள், மீன்வகைகள், நீர்வாழ் விலங்குகள், பாலூட்டி இனங்கள் பல்கி பெருகிய பகுதி ஆகும்.

இந்த பகுதியில் இதுபோன்ற திட்டத்துக்கான சோதனைகளை அனுமதிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது. இது அப்பகுதியின் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை ஆகும். எனவே நியூட்ரினோ திட்டத்துக்கான மதிப்பீடு செய்வதற்கு அனுமதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.