மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை! தமிழகஅரசு பிடிவாதம்

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும், அந்த பகுதியில்  போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமூச சேவகர் டிராஃபிக் ராமசாமி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில்,  மெரினாவில் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறி உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த டிராஃபிக் ராமசாமி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, மெரினாவில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் எந்தவொரு போராட்டமும் நடத்த தமிழக அரசு அனுமதி அளிப்பதில்லை.