பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்து உள்ளார்.

பிரிஸ்பெனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

பிரிஸ்பென் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். இதனை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். கோலி இல்லாத இந்திய அணி குறித்து விமர்சித்தவர்கள் தற்போது ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

இந் நிலையில் இந்தியர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தை இந்த தொடர் கற்றுக் கொடுத்துள்ளது. 150 கோடி இந்தியர்களில் மிகச்சிறந்த 11 பேருடன் விளையாடுவது கடினமாக தான் இருக்கும்.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற பின்னர் இந்திய அணி பின் வாங்கவில்லை. மீண்டும் எதிர்த்து போராடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுனர். இது பாராட்டுக்குரியது. இதன்மூலம் யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.