புதுடெல்லி:

ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக அகஸ்ட்டா வெஸ்லான்ட் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவன இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் தெரிவித்துள்ளார்.


கடந்த 2013-ம் ஆண்டு ஹெலிகாப்டர் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

விசாரணையின்போது காங்கிரஸ் தலைவர்கள் பெயரை கிறிஸ்டியன் கூறியதாக தகவல் கசிந்தது.
இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை விசாரணையின்போது நான் யார் பெயரையும் சொல்லவில்லை.
அமலாக்கத்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளை பிரதமர் மோடி அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார்.

முக்கியமான வழக்கில் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது தவறு.

குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்காத நிலையில், முன்னரே தகவலை கசியவிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே,டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில், ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் பேர முறைகேட்டில் மூத்த காங்கிரஸ் தலைவரின் பெயரை கிறிஸ்டியன் மைக்கேல் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த குற்றப்பத்திரிகையை ஏற்கும் முடிவை ஏப்ரல் 6- தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.