டில்லி,

டந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதைத்தொடர்ந்து, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைத்து மாற்றாக புதிய 2000 ரூபாய் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் இன்றி கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகினர். பணத்திற்காக வங்கி மற்றும் ஏடிஎம் வாசலில் காத்திருக்கும் அவல நிலை உருவானது.

ஆனால், பிரதமர் மோடியோ,  கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்,  இந்தியாவில் கருப்பு பணம் மற்றும் ஊழலற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்க இது உதவும் என்றும். தூய்மை இந்தியா போன்றே பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் இந்தியாவை சுத்தமாக்கும் முயற்சியே என்று  பெருமிதம் கொண்டார்.

மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாகவும், அதனால் கள்ள நோட்டுகள் அச்சடிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது.

ஆனால் மத்தியஅரசு கூறியது பொய் என்று தற்போது நிரூபணமாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய 2000  ரூபாய் கள்ள நோட்டுக்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள்  ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கம் பாகிஸ்தானில் கராச்சி, லாகூர் பகுதிகளில் இந்தியாவின் புதிய 2000 ரூபாய் போலவே கள்ள நோட்டு அச்சடித்து இந்தியாவுக்குள் ஊடுருவ செய்தது தெரிய வந்துள்ளது.

கள்ள நோட்டுகளிலும், ஒரிஜினல் நோட்டுக்கள் போன்று குறியீடுகள் இருப்பதாகவும் அதன் காரணமாக கள்ளநோட்டு எது, நல்ல நோட்டு எது என்று கண்டுபிடிக்க சிரமம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பாகிஸ்தானில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுக்களும் பங்களாதேஷ் வழியாக கடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் 500, 600 ரூபாய் நல்ல பணம் கொடுத்தால் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பங்களாதேஷ் வழியாக புதிய 500 ரூபாய் நோட்டுக்களை கடத்தி வந்தவர்களை எல்லையோர காவல் படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் கள்ள நோட்டை கண்டுபிடிப்பது எப்படி என்று பயிற்சி கொடுக்க இருப்பதாக மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.