வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதலைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில்,  உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக புதிய  அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.

புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்படும் காட்சி

வேதாரண்யத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, கார் மற்றொரு வாகனத்தை இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதை யடுத்து,  அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இது பெரும் பிரச்சினையானதால், சமூக மோதலாக மாறியது. இதைத்தொடர்ந்த,  பாண்டியன் தரப்பினர்,   ராஜேந்திரன் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், அவரது கால் துண்டிக்கப்பட்டது.

இதனால் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் மூண்டது, அங்கிருந்த பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலைத்  தடுக்க முடியவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

வேதாரண்யம் கலவரம்

இதற்கிடையில் மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்த  அம்பேத்கர் சிலையின் தலையை உடைத்துச சென்றார். இதனால் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.  அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை அடக்கினர். தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக மாற்றுச் சிலை வைக்கப்படும் என அரசு உறுதி அளித்தது அதன்படி,  அரசு சார்பில்  புதிய சிலை  வைக்கப்பட்டுள்ளது.