சட்டவிரோத சுரங்கத் தொழிலை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தில் மோடி அரசு!

புதுடெல்லி: மோடி அரசு திட்டமிட்டுள்ள சுரங்கச் சட்ட திருத்தத்தின்படி, சட்டவிரோத சுரங்கத் தொழில் நடவடிக்கைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில், சுரங்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுரங்க சட்டப்படி, சட்டவிரோதமாக தோண்டியெடுக்கப்படும் இரும்புத் தாது மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றின் மதிப்பில் 100%ஐயும் அரசாங்கம் கைப்பற்றலாம். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஒடிசாவில், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி இரும்புத்தாது மற்றும் மாங்கனீஸ் வெட்டியெடுத்த நிறுவனங்களிடமிருந்து ரூ.17576 கோடியை வசூலிக்க உத்தரவிட்டது.

ஆனால், மோடி அரசின் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், எதிர்காலத்தில் இத்தகைய இழப்பீட்டு வசூல் சாத்தியமில்லாமல் போகும். மேலும், ‘சட்டவிரோத சுரங்கத் தொழில்’ என்ற பதமே அடிப்பட்டுபோகும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் அமலானால், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் சட்டப்பூர்வ சுரங்க நடவடிக்கைகளாக மாறிவிடும். இது அத்தகைய சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒரு போனஸ் என்பதாக அமையும் என்று கூறப்படுகிறது.