வங்கிகளின் 80 சதவீத பணிகளை மேற்கொள்ளும் புதிய ஏடிஎம் தயாரிப்பு!!

--

அட்லாண்டா:

அமெரிக்காவின் ஜார்ஜியா நாட்டில் உள்ள அட்லாண்டா நகரைச் சேர்ந்த என்சிஆர் என்ற நிறுவனம் உரையாடல் வசதியுடன் கூடிய ஏடிஎம் ஒன்றை உருவாக்கியுள்ளது. வங்கிகளின் மேற்கொள்ளப்படும் 80 சதவீத பணிகளை இந்த எந்திரம் மூலம் மேற்கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எந்திரத்தின் மூலம் உள்ளூர் வங்கி கிளைகளை மூடும் நிலை வருமா£? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது பல நாடுகளில் ஏடிஎம் செயல்பாடு அதிகமாக இருந்தபோதும், மொபைல் மூலமான பரிமாற்றம் அதிகரித்து வருகிறது.

கடந்த 1967ம் ஆண்டு, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக ஏடிஎம் முக்கிய வீதிகளில் இடம் பிடித்தது. அப்போது முதல் இதன் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. தற்போது என்சிஆர் நிறுவனம் உருவாக்கியுள்ள எந்திரம் வங்கிகளுக்கு மாற்றாக செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
இதை உருவாக்கியுள்ள என்சிஆர் ஃபைனான்சியல் சர்வீஸஸ் சொலுயூஷன்ஸ் துணைத் தலைவர் ஜோஸ் ரெசன்டிஸ் இதை தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த எந்திரம் மொபைல் போன் செயலியுடன் இணைந்து செயல்படும் . பரிமாற்றங்களை முன் கூட்டியே திட்டமிடலாம். ஏடிஎம் கார்டு மட்டுமின்றி மொபைல் போன் செயலியை பயன்படுத்தி ரொக்கம் எடுக்கலாம். இந்த எந்திரத்தில் உள்ள வீடியோ வசதி மூலம் வங்கி ஊழியருடன் உரையாடலாம்.

இதன் மூலம் வங்கி வேலை நேரத்திற்கு பின்னரும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவ முடியும். குறைவான வங்கி கிளைகள் உள்ள பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். 80 சதவீத வங்கி பணிகளை இந்த புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஏடிஎம் மூலமே மேற்கொள்ளலாம். இது பயன்பாட்டிற்கு வந்த பின்னர் தான் வங்கி கிளைகளை மூட வேண்டிய நிலை ஏற்படுமா? என்பது தெரியவரும்’’ என்றார்.

தற்போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த எந்திரங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனை தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது?. 2015ம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்களுக்கு போர்ச்சுகலில் ஆயிரத்து 501 ஏடிஎம்.களும், பிரிட்டனில் ஆயிரத்து 52, சுவீடனில் 335 எந்திரங்கள் நிறுவப்பட்டது.

இதில் போர்ச்சுகலில் ஏடிஎம் பயன்பாடு வலுவான நிலையில் உள்ளது. சுவீடன் போன்ற நாடுகள் ரொக்கமில்லா பரிவர்த்தனையை அதிகரித்து வருகிறது. கார்டுகளை பயன்படுத்தி ரொக்கம் எடுப்பது பிரிட்டனில் 14 சதவீதம், சீனாவில் 33 சதவீதம், இந்தியாவில் 80 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

கார்டு பயன்பாட்டில் உள்ள வேறுபாடு இதை காட்டுகிறது. 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஏடிஎம்.களின் எண்ணிக்கை இந்தியா மற்றும் சீனாவில் அதிகரித்து வந்துள்ளது.