புபனேஷ்வர்: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின சமூகங்களைக் கொண்டிருக்கும் ஒடிசா மாநிலத்தில், பழங்குடியின மொழிகளைப் பாதுகாக்கும் வகையில் இரட்டை மொழியிலான பழங்குடியின அகராதிகளை வெளியிட்டார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.

இந்த அகராதிகள், பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டங்களில், தொடக்க நிலையிலான பன்மொழி கல்வியில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த அகராதிகளில் ஒடியா மொழியே தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கநிலை பன்மொழிக் கல்விக்கான இரட்டைமொழி பழங்குடியின அகராதிகள் மற்றும் 21 பழங்குடியின மொழிகளிலும் உள்ள மும்மொழி பழங்குடியின மொழிவன்மை தொகுதிகள் ஆகியவை சிறப்பு மேம்பாட்டு கவுன்சிலால் முறைப்படுத்தப்பட்டன. மேற்குறிப்பிட்ட இரண்டு அம்சங்களும் பழங்குடியின மொழிகளில் புலமையை வளர்த்துக்கொள்ள உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே மிக அதிகமாக மொத்தம் 62 பழங்குடியின பிரிவு மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 13 இனத்தினர் அழியும் நிலையில் உள்ளவர்கள். அந்த மொத்த பழங்குடியின மக்களும் 21 மொழிகள் மற்றும் 74 பேச்சு வழக்குகளைப் பயன்படுத்துகின்றனர். 21 மொழிகளில் 7 மொழிகளுக்கு சொந்தமாக எழுத்துக்கள் உள்ளன.