டெல்லி:

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, தாடி மீசையுடன் காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எப்போதும் மழித்த முகத்துடன் அமுல்பேபியாக காட்சியளிக்கும் ராகுல்காந்தி, தற்போது தாடி மீசையுடன் புதிய அவதாரம் எடுத்துள்ளது, காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத இளம்தலைவர்களில் ஒருவர் ராகுல்காந்தி. இவர் கடந்த 2004ம் ஆண்டு தனது 24வது வயதில்,  அரசியலில் முதலடியை எடுத்து வைத்தார். இடையில் சில ஆண்டுகள், அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.  பின்னர். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, தீவிர அரசியலில் களம் புகுந்தார். அதைத்தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்று கட்சியை நடத்தி வந்தவர், இந்த ஆண்டு (2019)  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பம்பரமாக சுழன்று பணியாற்றியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால்,  காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதனால்,தோல்விக்கு  பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, வயநாடு தொகுதியின் எம்.பி.யாக தனது அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் நேரம் மட்டுமின்றி, தினசரி அரசியல் வாழ்க்கையில், பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ராகுல்காந்தி, பார்ப்பதற்கு, சிரித்த முகத்துடன், சிறுவனைப் போல சுறுசுறுப்பாகவும், எளிமையாகவும் காணப்படுவார்.

அவரது மழித்த முகத்தைக் கண்டு எதிர்க்கட்சியினர் அவ்வப்போது விமர்சித்து வந்த நிலையில், தற்போது புதிய அவதாரமாக, தாடி மீசையுடன் காணப்படும் புகைப்படம்வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில், இடையிடையே  வெள்ளை முடிகளும், கருப்பு முடிகளும் கலந்து காட்சி அளிப்பது, பெப்பர் சால்ட் தோற்றத்தை ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது…