டில்லி

ங்கி முதலீடுகளுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீடு ஆக உள்ளதை அதிகரிக்க புதிய திட்டம் கொண்டு வர உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வங்கிகளிலும் முதலீடு செய்யப்படும் தொகைகளுக்கு காப்பீடு வசதி உண்டு.   இதன் உச்சவரம்பு ரூ. 1 லட்சம் ஆகும்.  அதாவது ஒரு வங்கி திவாலாக நேர்ந்தால் முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்திருந்தாலும் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்  மட்டுமே திரும்பக் கிடைக்கும்.    இதுவரை முதலீட்டாளர்கள் இது குறித்து கவலை கொள்ளவில்லை.

ஆனால் சமீபத்தில் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்குப் பிறகு இந்த காப்பீடு குறித்து முதலீட்டாளர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.   எனவே மற்ற வங்கிகளிலும் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள்  தயங்கி வருவதாகக் கூறப்பட்டது.

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம், “வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கான ரூ.1 லட்சம் காப்பீடு தொகையை அதிகரிக்க புதிய சட்ட மசோதா கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது   இந்த மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.