ம்மம்

பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவர்கள் அலட்சியம் செய்ததால்   மருத்துவமனை வாசலில்  பெஞ்சிலேயே பிறந்த குழந்தை உருண்டு  விழுந்து இறந்து விட்டது.

கம்மம் அருகே உள்ள பல்லேகுடம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நாகமணி.  கர்ப்பமாக இருந்த நாகமணி நேற்று கம்மம் தாய் சேய் நல விடுதிக்கு பிரசவத்துக்காக வந்துள்ளார்.  கடுமையான வலி என அவர் கூறியும் அதை மருத்துவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.  அவருடைய மெடிகல் ரிகார்டின் படி அவருடைய பிரசவ தேதி அக்டோபர் 26 எனவும், உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறும் கூறி விட்டனர்.

வலி மிகவும் அதிகமாக இருந்ததால் நாகமணியால் நடக்கவும் முடியவில்லை.  நாகமணியின் கணவரும், உறவினர்களும், மருத்துவரிடம் அவரை கவனிக்குமாறு கெஞ்சி உள்ளனர்.  ஆனால் அவர்கள் சொல்வதை மருத்துவர் கவனிக்கவே இல்லை.

அங்கிருந்த ஒரு இரும்பு பெஞ்சில் வலியுடன் படுத்திருந்த நாகமணி, அந்த பெஞ்சிலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.  அப்போதும் மருத்துவர் யாரும் அவர் பக்கத்தில் வந்து பார்க்கக் கூட இல்லை.

பிறந்த குழந்தை மெல்ல உருண்டதில் அந்த சிறிய பெஞ்சில் இருந்து கீழே விழுந்து விட்டது.  பலத்த காயம் அடைந்த அந்த குழந்தை உடனடியாக இறந்து விட்டது.  நாகமணியின் துயரம் இத்துடன் முடியவில்லை.

மருத்துவர்கள் அதற்குப் பின்பும் அவருக்கு அந்த மருத்துவமனையில் படுக்கை தரவில்லை.  அதை கேட்ட அவரது கணவரையும், உறவினர்களையும் திட்டி மருத்துவர்கள் தாறுமாறாக திட்டி உள்ளனர்.  இந்த செய்தி வெளியில் பரவியது.  மக்களில் பலரும் மற்றும் உள்ளூர் பா ஜ க பிரமுகர் கிருஷ்ணசாகர் ராவும் வந்தபின் அவருக்கு படுக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணசாகர் ராவ், ”ஒரு ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு அடிப்படை வசதிகள் கூட இந்த அரசு மருத்துவமனையில் செய்து தரப்படவில்லை.  அதனால் அவருக்கு பிரசவிப்பது கடினமானதுடன், பிறந்த குழந்தையும் உடனடியாக இறந்துள்ளது.  இதற்கு தெலுங்கானா அரசு பொறுப்பேற்க வேண்டும்.  ஆனால் அரசு எத்தனை பேர் செத்தாலும் கவனிக்காமல் பொதுப் பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது” என கூறினார்.

இந்த செய்தி அறிந்த தெலுங்கானா அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் இது குறித்து விசாரித்து, மருத்துவமனை நிர்வாகிகள் மேலும் மருத்துவர் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.  ஆட்சியாளர் விசாரித்து வருகிறார்.