புதுடெல்லி: தற்போதைய இந்திய நாடாளுமன்ற கட்டட வளாகமும், அதையொட்டி அமைந்துள்ள அரசு அலுவலகங்களும் முற்றிலும் மாற்றியமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தமும் சொல்லிவைத்தாற்போல், குஜராத் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தை மத்திய அரசு இடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், பாரம்பரியம் மிக்க அக்கட்டடத்தை இடிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தன.

இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டதாகவும், நாடாளுமன்ற கட்டடம் அருங்காட்சியகமாய் மாற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு மகிழலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் உள்துறை அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் பிளாக், பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக் ஆகிய கட்டடங்கள் முற்றிலும் புதிய முறையிலும், நவீனமாகவும் மாற்றப்படவுள்ளன.

மேலும், நாடாளுமன்றத்திற்கு புதியக் கட்டடம் கட்டப்படவுள்ளதாம். இதற்காக ஜனாதிபதி மாளிகை அருகிலேயே இடம் தேர்வுசெய்யப்படவுள்ளதாம். வரும் 2024ம் ஆண்டு அடுத்த மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்குள் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.