சென்னை:
ற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ள திருமழிசையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார்.

கோயம்பேடு மார்க்கெட் கொரோனா கிளஸ்டராக மாறியதால், அது மூடப்பட்டு தற்காலிக காய்கறி சந்தை பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே திருமழிசையில் 311 ஏக்கர் நிலத்தில்  துணைக்கோள் நகரம்,   12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின்  25 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து முனையம் அமைப்பது தொடர்பாகவும்ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தற்போது காய்கறி சந்தை அமைந்துள்ள  25 ஏக்கர் பரப்பில்,  மேற்கு மாவட்ட பேருந்துகளுக்கான புதிய பேருந்து முனைய வடிவமைப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் இன்று  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேருந்து முனையம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத் தில், வீட்டுவசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்போது அமைந்துள்ள  கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் பண்டிகைகளின் போது அதிகளவில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ், மேற்கு மாவட்ட பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையம், ஆந்திரா நோக்கி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.
மாதவரம் பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு செயல் படத் தொடங்கிவிட்ட நிலையில் அங்கிருந்தே ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையத்துக்கான பணிகள் கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து மேற்கு பகுதிக்கு செல்லும் பேருந்துகளுக்காக திருமழிசையில் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.