பெங்களூரு

ட்டி ஐந்தே வருடமான பெங்களூரு  கங்கா நகர் பேருந்து நிறுத்தம்  ரூ. 98 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட உள்ளது.

பெங்களூரு நகரில் சகாகர் நகர் பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டு சமீபத்தில் புதியதாக அமைக்கப்பட்டது.    இதை எம் எஸ் சுரேஷ் என்பவர் தனது பெற்றோரின் நினைவுக்காக அமைத்தார்.  இந்த பேருந்து நிலையம் முழுவதும் கிரானைட் பதிக்கப்பட்டு ஹொய்சளா முறையில் கட்டபட்டுள்ளது.    அதைத் தொடர்ந்து சுரேஷுக்கு மாரப்பன்பாளையா பேருந்து நிறுத்தத்தை புதியதாக அமைக்கும்  பணி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுரேஷுக்கு கங்கா நகர் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.   இந்த பேருந்து நிறுத்தம் சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு இன்று வரை நல்ல நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.   சுரேஷ் கங்கா நகர் மற்றும் மாரப்பன்பாளையா பேருந்து நிறுத்தங்களையும் கிரானைட் பொருத்தி சகாகர் நகர் பேருந்தைப் போல் அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சியின் கங்கா நகர் உறுப்பினர் பிரமீளா, “சகாகர் நகர் மற்றும் மாரப்பன்பாளையா பேருந்து நிறுத்த வரிசையில் கங்கா நகர் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.    இந்த பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் பயணிகள் அமர 25 இருக்கைகள் பொருத்தப்பட உள்ளன.  அத்துடன் பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்காகக் கழிவறைகள் கட்டப்பட உள்ளன.

இந்த பேருந்து நிலையம் ரூ.45 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது.   இங்கு மற்ற வசதிகளுக்காக ரூ.53 லட்சம் செலவிட உள்ளோம்.   மொத்தம் ரூ.98 லட்சம் செலவில் அமையும் இந்த பேருந்து நிலையத்தில் காலையில் இருந்து நாள் முழுவதும் பாடல்கள் ஒலிபரப்பப்பட உள்ளன.  காலையில் சுப்ரபாதம், பிறகு பக்தி பாடல்கள் எனத் தொடங்கும்  இந்த ஒலிபரப்பில் சமிப்பத்திய கன்னட  பாடல்கள், இசைப் பாடல்கள், வாத்திய இசை ஆகியவை தொடரும். இந்த பேருந்து நிலையத்தில் மக்கள் படிக்க 6 செய்தித்தாள்கள் வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.