டில்லி

த்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் டிஜிடல் மீடியா ஊடகங்களை கட்டுப்படுத்த குழு ஒன்றை அமைக்க உள்ளது.

சமீபத்தில் பொய்ச் செய்தி பரப்பும் பத்திரிகையாளரின் உரிமை பறிக்கப்படும் என ஸ்மிரிதி இரானியின் தலைமையில் இயங்கும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவித்தது.    அதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த அறிவிப்பை பிரதமர் மோடி ரத்து செய்தார்.   ஆயினும் சர்ச்சை ஓயாமல் பிரதமரின் உருமாற்றப் படத்தை முன்பு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை வெளியிட்டதை  பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டினர்.

தற்போது அந்த அமைச்சகத்தில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் டிஜிடல் மீடியாவை கட்டுப்படுத்த ஒரு புதிய குழு அமைப்பதாக கூறப்பட்டுள்ளது.   அந்த அறிவிப்பில், “கடந்த மாதம் அமைச்சர் ஸ்மிரிதி இரானி ஆன்லைன் மற்றும் டிஜிடல் மீடியாவை கட்டுக்குள் கொண்டு வர பல திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   அதை ஒட்டி ஒரு புதிய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.  இந்தக் குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடக ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைக்கப்படுவார்கள்.

தற்போது ஆன்லைன் செய்திகள், உட்பட பல ஊடகங்களில் தவறான செய்திகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.   இது போன்ற ஊடகங்கள் எந்த சட்டத்தினுள்ளும் வருவதில்லை.   அதனால் இவைகளை கட்டுப்படுத்த இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.    இந்தக் குழு இந்த ஊடகங்களுக்கான கொள்கைகளை நிர்ணயம் செய்யும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “இந்தக் குழுவில் இடம் பெறுவோருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.    இந்தக் குழுவில் அனைத்து ஊடகம் மற்றும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள்.   இந்தக் குழு செய்தி ஊடகங்களில் வெளிநாட்டு முதலீடு குறித்தும் ஆராய்ந்து முடிவு செய்யும்.   தற்போது இது குறித்து எந்த ஒரு விதியும் இல்லாததால் அதையும் இந்தக் குழு அமைக்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.