சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்திற்கான திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் புதிய நபருக்கு சென்ற மறுநாள், அந்த மண்டலத்தைச் சேர்ந்த சைதாப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில், குப்பை பரிமாற்ற நிலையங்களின் வாயில்களில், நிறைய குப்பை லாரிகள், குப்பைகளைக் கொட்டுவதற்காக வரிசைக்கட்டி நின்றன.

அந்த நிலையங்களின் மூடியக் கதவுகளை திறந்துவிடுமாறு கோரிக்கைகள் எழுந்தன.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த தனியார் விற்பனையாளர்கள், இதற்கு முந்தைய ஒப்பந்ததாரருடன், மேற்கண்ட பரிமாற்ற நிலையங்களில் குப்பைகளைக் கொட்டிக்கொள்ளும் வகையில், ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பரிமாற்ற நிலையங்களிலிருந்து, குப்பைகள், சம்பந்தப்பட்ட குப்பை கொட்டும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். முந்தைய ஒப்பந்ததாரருக்கு, கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவுக்கேற்ற வகையில், சென்னை மாநகராட்சியால் பணம் வழங்கப்பட்டு வந்தது.

விற்பனையாளர்களால் பெறப்பட்ட கழிவுகளை, குப்பைக் கொட்டும் இடங்களுக்கு தாங்கள் முன்னர் கொண்டு சென்றது உண்மைதான் எனவும், ஆனால், அது மாநகராட்சியின் ஒப்புதலுடனேயே நடந்தது என்றும் ராம்கி எண்டர்பிரைசஸ் நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறினார்.

தற்போதைய புதிய ஒப்பந்ததாரர் அர்பேஸர்-சுமீத், “தற்போதைய பரிமாற்ற நிலையங்கள் அனைத்தையும் மூடி, அதை பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கான பரிமாற்ற நிலையங்களாக மாற்றவுள்ளோம். அவசரகாலங்களில் மட்டுமே, அதை குப்பை பரிமாற்ற நிலையமாக பயன்படுத்துவோம்.

விற்பனையாளர்களிடமிருந்து வரும் லாரிகள், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளுக்கு குப்பைகளை கொண்டு செல்லுமாறு எங்களைக் கேட்கின்றன. எனவே, இதுகுறித்து நாங்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளோம்” என்றார்.