விஜய் மல்லையாவை வெளியேற்ற உத்தரவா ? பரிந்துரையா? புதிய சர்ச்சை

ண்டன்

விஜய் மல்லையாவை வெளியேற்ற உத்தரவிடவில்லை எனவும் அதற்கு பரிந்துரை செய்ய்யப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிக் கடன் வாங்கி விட்டு திருப்பித் தராமல் இருந்தார். அதை ஒட்டி சிபிஐ நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை இந்தியா அழைத்து வர வழக்கு தொடரப்பட்டது. இந்தியா வந்தால் தமக்கு சிறைச்சாலையில் பாதுகாப்பு இல்லை என மல்லையாவின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

அதை ஒட்டி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அவரை அடைக்க உள்ள அறைகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அரசு லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. மக்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியது. விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து பல கருத்துக்கள் உலவ ஆரம்பித்தன.

இந்நிலையில் ஆங்கில ஊடகங்களில் தீர்ப்பு குறித்து வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி தீர்ப்பில், “இந்திய சட்டப்படி விஜய் மல்லையா பண மோசடி குற்றம் செய்திருப்பது தெளிவாகி உள்ளது. அந்த குற்றங்கள் இந்திய நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டால அவருக்கு ஒரு ஆண்டுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்க இந்திய சட்டத்தில் இடம் உள்ளதை இந்த நீதிமன்றம் அறிந்துள்ளது.

இந்த வழக்கில் விஜய் மல்லையாவின் தரப்பு வாதங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவைகள் அல்ல என்பதால் நீதிமன்றம் அதை புறக்கணிக்கிறது.

முடிவாக இந்த தீர்ப்பின் மேல் விவரங்களின் அடிப்படையில் நான் விஜய் மல்லையாவின் வழக்கை நாட்டின் உள்துறை செயலருக்கு அனுப்பி விஜய் மல்லையாவை திருப்பி அனுப்புவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியின் மூலம் விஜய் மல்லையா திருப்பி அனுப்பப்படுவது இன்னும் நீதிமன்றம் உறுதி செய்யவில்லை எனவும் அது குறித்து உள்துறை செயலரின் முடிவே இறுதியானது எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.