ஜெனிவா: இங்கிலாந்தில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையிலான  உருமாறிய கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள கொரோனா தொற்று பரவலை விட, 70 சதவிகிதம் வேகமாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.  மேலும், இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளி நாடுகளுக்கு சென்ற பலருக்கும் புதிய வகையிலான தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாககூறப்படுகிறது. அங்கிருந்து,  இந்தியா வந்த சிலருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், இந்தியா உள்பட பல நாடுகள் இங்கிலாந்துக்கு விமானம் மற்றும் கப்பல் சேவையை முழுமையாக தற்காலிகமாக தடை செய்துள்ளது.
இந்த நிலையில், புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவல், கட்டுப்பாட்டுக்குள் தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் குறித்து கூறியுள்ள,  உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான்,  உலகின் பல நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை.
உருமாறிய கொரோனா வைரைஸக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்தால் போதுமானது. ஆனால், இன்னும் சற்று தீவிரத்தன்மையுடனும், நீண்டகாலத்துக்கும் செய்வது வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கும். அப்போதுதான் உருமாறிய கொரோனா வைரஸ் சற்று வீரியத்தன்மை உள்ளதாக இருந்தாலும் அதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.