குடும்பத்தினருடன் செல்ல அனுமதியில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

கராச்சி: இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, பாகிஸ்தான் வீரர்கள் தங்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதேசமயம், வீரர்களின் குடும்பத்தினர்கள் இங்கிலாந்து செல்ல வேண்டுமென்றால், அவர்ககள் தங்களுடைய சொந்த ஏற்பாட்டில் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள், தங்களைச் சுற்றியிருக்கும் நபர்களால் கவனம் சிதறாமல் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, இங்கிலாந்துடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தம் மனைவி மற்றும் குடும்பத்தினர்களுடன் செல்வதற்கு வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோஹைல் மட்டும், தனிப்பட்ட காரணங்களுக்காக குடும்பத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள், வெளிநாட்டு போட்டிகளுக்கு செல்லும்போது குடும்பத்துடன் சென்று ஹோட்டல்களில் தங்கிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.