நித்யானந்தாவின் தனி நாடு கைலாசா : புதிய தகவல்கள்

குவடார், தென் அமெரிக்கா

தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கிய நித்தியானந்தா அதைத் தனது தனி நாடாக அறிவித்துள்ளார்

ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கி வருவது நித்தியானந்தாவுக்கு வழக்கமாகி உள்ளது.  மதுரை ஆதீனகர்த்தா, நடிகை ரஞ்சிதா உடன் வீடியோ, பாலியல் புகார்கள் எனப் பல சர்ச்சைகளில் அவர் ஒரு தொடர்கதையாக உள்ளார்.   சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் இரு பெண்கள் காணாமல் போனதாக அந்த பெண்களின் தந்தை அளித்த புகார் தற்போதைய சர்ச்சையாக உள்ளது.   அவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

தற்போது அவர் தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவை வாங்கி அதைத் தனது நாடாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.   அந்த நாட்டின் பெயர் கைலாசா என அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் அந்த பகுதியைத் தனி நாடாக அறிவிக்க அமெரிக்கச் சட்ட நிறுவனம் மூலம் அவர் ஐநா சபைக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, “கைலாசா என்பது இந்துமதத்தைப் பின்பற்ற முடியாத நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களின் எல்லையற்ற நாடாகும்.  இது அமெரிக்காவில் உள்ள இந்து ஆதி சைவ மக்களால் உருவாக்கப்பட்டது என்றாலும் இனம், பாலினம், சாதி,  மதம் என எந்த வேறுபாட்டையும் பார்க்காத இந்துக்களுக்கான நாடாகும்.  இந்நாட்டில் ஆன்மீகம், கலாச்சாரம் அகிம்சை ஆகியவை  பின்பற்றப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் மக்கள் தொகையாக 10 கோடி ஆதி சைவர்கள், 2000 கோடி இந்து மக்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.   நாட்டு மொழியாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்நாட்டின் மதம் சனாதன இந்து தர்மம் அதாவது இந்துயிசம் ஆகும்   இந்நாடு 56 தெற்காசிய மற்றும் அகில உலக அசல் வேத நாடுகளைச் சேர்ந்தோருக்கானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாசா நாட்டில் உள்நாட்டுக் காவல், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், மனித வள மேம்பாடு, மேம்பட்ட நாகரிகம் ஆகிய துறைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.,

இந்நாட்டின் சின்னம் மற்றும் கொடியில் நந்தி மற்றும் நித்யானந்தா ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

இந்த நாட்டுக்கென தனி ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இந்து மக்கள் இங்கு முதலீடு செய்யலாம் எனவும் இந்த முதலீடுகள் இந்துக்களுக்கு கடன அளிக்கப்பட்டு அவற்றின் மூலம் அகிம்சையான வர்த்தகங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வங்கியில் கிரிப்டோ கரன்சிகள் ஏற்கப்படும் எனவும் இந்த வங்கியை ஒரு மையமான நிதி நிறுவனம் நிர்வகிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில், இந்து பல்கலைக்கழகம், குருகுலம், பத்திரிகைப் பல்கலைக்கழகம், புனித கலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

இந்த நாட்டுக்கான தொலைக்காட்சிகளாக நித்யானந்தா டிவி, இந்துயிஸம் நவ், மற்றும் நித்யானந்தா டைம்ஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.  அத்துடன் இந்த நாட்டுக்கென தனி பாஸ்போர்ட் வடிவங்கள் காட்டப்படுள்ளன.

இந்நாட்டின் ரிசர்வ் வங்கியில் தற்போது 6 டன்கள் தங்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தங்கம் பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு துலாபார வழிபாட்டில் கிடைத்ததாகும்.