சீனாவில் மேலும் ஒரு புது நோய்.. 

சீனாவில் மேலும் ஒரு புது நோய்..

சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பயன்னுர் நகரில் ‘புபோனிக் பிளேக்’ எனப்படும் புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இப்பகுதியின் 27 வயது நபர் ஒருவருக்கும் அவரது 17 வயதான சகோதரருக்கும் இந்த நோய் தாக்கியது தெரிய வந்துள்ளது.

இந்த இருவரும் “மர்மோட்” எனப்படும் காட்டு எலி போன்றவற்றின் இறைச்சியைச் சாப்பிட்டதால் இந்நோய்க்கு ஆளாகி உள்ளதாகத் தெரிகிறது.  எனவே உடனடியாக மக்கள் யாரும் இந்த மர்மோட் இறைச்சியை உண்ண வேண்டாம் என்று அந்நாட்டுச் செய்தி நிறுவனமான ஷின்ஹுவா அறிவுறுத்தியுள்ளது.

விலங்குகளிடம் இருந்து பரவும் இந்த புபோனிக் நோய் அவற்றைக் கடிக்கும் பூச்சிகள் வாயிலாக மனிதர்களுக்கும் பரவக்கூடியது.  நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும், யெர்சினியா என்ற பாக்டீரியா மூலமாகவும் இந்த நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கான சிகிச்சையை உடனடியாக எடுக்காத பட்சத்தில் 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பதிப்பிலிருந்தே உலகம் விடுபட முடியாமல் தவித்து வரும் இந்த கொடுமையான நிலையில் மீண்டும் சீனாவிலிருந்து அடுத்த வைரஸ் தாக்குதல் தொடங்கியிருப்பது பெரும் அச்சத்தை அளித்துள்ளது.

– லெட்சுமி பிரியா